பள்ளிகளில் விளையாட்டை கட்டாயப்பாடமாக்கி, அதற்கும் மதிப்பெண்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, இந்த பாடத்திலும் தேர்ச்சி பெறுவதும் அவசியமாகும்.
இந்த திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நாடுமுழுவதும் நடைமுறைக்கு வரும் என மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு கட்டாயமாக பாடமாக்கப்பட்டு, அதிலும் தேர்ச்சி பெறுவது அவசியமாக்கப்படுகிறது. இந்த திட்டம் படிப்படியாக அனைத்து வகுப்புகளிலும் நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த திட்டம் முதலாம் வகுப்பில் இருந்து தொடங்கப்பட்டு படிப்படியாக உயர்வு வகுப்புகளுக்கு அதிகரிக்கப்பட உள்ளது.
இது குறித்து விளையாட்டுத்துறை செயலாளர் ஸ்ரீநிவாஸ், “ இந்த பரிந்துரைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டோம், நடைமுறைப்படுத்துவதுதான் சவாலானது. இந்த பரிந்துரைகள் அமல்படுத்தும் போது, நிச்சயம் சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாக்குவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும்.
இந்த திட்டத்தை சி.பி.எஸ்.இ. பள்ளிகள் கொள்கையாக ஏற்றுக்கொண்டு கட்டாயமாக்கப்படும். அதேசமயம், மாநிலப்பள்ளிகளும் ஏற்றுக் கொள்வார்கள்.
இப்போதுள்ள நிலையில், 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் எந்தவிதமான இடையூறும் இருக்காது, அதேசமயம், 9-ம் வகுப்பில் இருந்து விளையாட்டு பாடத்திலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
திடீரென 12-ம் வகுப்புக்கு கட்டாயமாக்கப்படாது. இந்த பாடத்திட்டத்தின் பயன் அடுத்த 10 ஆண்டுகளுக்குப்பின் தெரியும்.
இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும், விளையாட்டுக்கான கட்டமைப்புகள் பள்ளியில் உருவாகும், பயிற்சியாளர்கள் சிறந்த வீரர், வீராங்கனைகள் உருவாக்கப்படுவார்கள்.
இவர்களுக்கு கட்டமைப்புகளை உருவாக்குவதுதான் அவசியமானதாகும்'' எனத் தெரிவித்தார்.
