Spending time with our Forces gives me new energy says modi

வட இந்தியாவில் மூன்று தினங்கள் தீபாவளிப் பண்டிகை களைகட்டும். இன்று முக்கிய தீபாவளிப் பண்டிகை தினம் என்பதால், இன்றே பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாட இன்று காலை ஸ்ரீநகருக்குச் சென்று, அங்கிருந்து பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள குரெஸ் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றார். 

வித்தியாசமாக, பிரதமர் மோடியும் ராணுவ வீரர்கள் அணியும் உடையை அணிந்து, உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடினார். குரெஸ் பகுதியில் ராணுவத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் 2 மணி நேரத்துக்கும் மேல் இருந்தபடி, தீபாவளியைப் கொண்டாடினார். 
வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். சில வீரர்களுக்கு தானே சென்று இனிப்புகளை ஊட்டிவிட்டார். அதன் பின்னர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த அவர், வீரர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், என்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளியைப் கொண்டாட விரும்பினேன். அதனால்தான், நான் என் குடும்பமாகக் கருதும் ராணுவத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட இங்கே வந்துள்ளேன். எப்போதெல்லாம் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நான் நேரத்தைச் செலவிடுகிறேனோ அப்போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. மிகவும் கடுமையான சூழலில் பணியாற்றும் பாதுகாப்புப் படை வீரர்களின் அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் பாராட்டப் பட வேண்டியவை என்று பேசிய மோடி, ராணுவத்தினருக்கு அரசு மேற்கொண்டுள்ள மேம்பாட்டு திட்டங்களைப் பற்றிக் கூறினார். ராணுவத்தில் ஒரு பதவி ஒரே ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தியதை சுட்டிக்காட்டினார். 
பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், படை வீரர்கள் சிறப்பான யோகா ஆசிரியர்கள் ஆக முடியும் என ராணுவ வீரர்களைப் பாராட்டிப் பேசினார் பிரதமர் மோடி. 

வழக்கமான உடையில் அல்லாமல், ராணுவத்தினர் அணியும் சீருடையுடன் மோடி கலந்து கொண்டு கலகல என நேரத்தை செலவழித்ததில், ராணுவ வீரர்கள் உற்சாக மிகுதியில் கோஷமிட்டு பாராட்டினர். 

Scroll to load tweet…