spectrum case

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை…. ஆ.ராசாவை குற்றவாளியாக அறிவிக்க சிபிஐ கோரிக்கை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியிருப்பதால், அவரை குற்றவாளி என அறிவிக்க வேண்டுமென, மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

நாட்டிற்கு சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, டெல்லியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 20-ம் தேதி முதல், இந்த வழக்கில் இறுதிக்கட்ட வாதம் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ஆ.ராசா நேரில் ஆஜரானார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் ஆ.ராசா மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டதும், அதன்மூலம் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதும் பல்வேறு ஆவணங்கள் மூலம் நிரூபணமாகியிருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் திரு.ஆனந்த் க்ரோவர் வாதிட்டார்.

எனவே, ஆ.ராசாவை குற்றவாளியாக அறிவித்து உரிய தண்டனை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.