பிரதமர் மோடி அறிவித்த செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அறிந்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க 32 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில், கடந்த 8-ந் தேதி பிரதமர் மோடி புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார்.

இந்த அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 32 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்த 32 குழுக்களில் கூடுதல் செயலாளர் மற்றும் இணை செயலாளர், இயக்குநர் மற்றும் துணை செயலாளர் அந்தஸ்தில் 70 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த அதிகாரிகள் அனைவரும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை மாநிலம் வாரியாக பிரித்து பணியாளர் மற்றும் பயிற்சித்துறை நியமித்துள்ளது.

அதன்படி, குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, மேற்குவங்காளம், இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, தமிழகம், ஆந்திரா, உத்தரகாண்ட், ஜம்முகாஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு தலா 3 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானா, கேரளா, ஹரியானா, சட்டீஸ்கர், ஜார்கான்ட், கோவா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு தலா 2 அதிகாரிகளும், நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், அந்தமான், நிகோபர், லட்சத்தீவு, புதுச்சேரி, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநிலத்தில் கள ஆய்வு செய்து, செல்லாத ரூபாய் அறிவிப்பால் மக்களின் பாதிப்புகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். எப்போது மாநிலங்களில் நேரடி ஆய்வு செய்வது குறித்து பொருளாதார விவகாரத்துறை தெரிவிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.