கடந்த வாரத்தில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்றிய பிறகு, அன்றிரவே பிரதமர் மோடியுடன் அமித் ஷா தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, உடனடியாக பாதுகாப்புத்துறையின் செயலாளர் அஜித் தோவலை அழைத்துள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில் ஏற்கெனவே முன் அனுபவம் உள்ள தோவலிடம் நீண்டநேரம் பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அதன்தொடர்ச்சியாக முதலில் அங்கு பாதுகாப்பை அதிகரிப்பது என்றும், அங்கிருக்கும் வெளி மாநிலத்தவரை வெளியேற்றுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கூடுதலாக 8,000 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சி-17 போக்குவரத்து விமானம் மூலம் துணை ராணுவப்படையினர் ஸ்ரீநகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறன்றன. ஏற்கனவே கடந்த வாரத்தில் மட்டும், 35,000க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டு வந்தனர். 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்த மத்திய அரசு இதனை ரகசியமாக வைத்து வந்தது. இதற்காக கடந்த ஒரு வாரமாக பல அதிரடி நடவடிக்கைகளை காஷ்மீரில் மத்திய அரசு செய்து வந்தது. அமர்நாத் யாத்திரை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது என்று பொதுவெளியில் தெரிவித்துவிட்டு, அமர்நாத் யாத்திரைக்க வந்த பக்தர்கள் உடனடியாக தங்கள் செந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல உத்தரவிட்டது. 

தொடர்ந்து, வெளிமாநில மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட வெளிமாநிலங்களை சேர்ந்த அனைவரும் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தச் சூழலில் நேற்று முன்தினம் இரவு முதல் கேபிள் சேவைகள், தொலைபேசி, இணையதள சேவைகள் முடக்கி வைக்கப்பட்டது, இந்த முடக்கம் இன்னும் தொடர்ந்து வருகிறது. 

திங்களன்று இந்த மசோதா அவைக்கு வரும் முன்பு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நடைபெறும்வரை காஷ்மீர் விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது அரசு என்று மூத்த கேபினட் அமைச்சர்களுக்குக்கூடத் தெரியாது. இந்த மசோதாவில் உள்ள ஷரத்துகளை அதுவரை தெரிந்திருந்தவர்கள் மோடி, அமித் ஷா, தோவல் ஆகிய மூவர் மட்டுமே. 

ஜம்மு காஷ்மீரில் இணைய சேவை மற்றும் தொலைத்தொடர்பு செயல்படாத நிலையில் கடந்த வாரம் மட்டும் உள்துறை அமைச்சகம் 2 ஆயிரம் முறை ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துடன் செயற்கைகோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உள்ளது. கடந்த 10 நாட்களில், துணை இராணுவப் படைகளின் 350 கம்பெனி - 35,000 ராணுவ வீரரகள் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தைக் ரத்து வரலாற்றுத் தீர்மானம் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டதும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஸ்ரீநகரில் இருந்தார், அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவது குறித்து அவர்  மேற்பார்வையிட்டார்.