இஸ்ரோவில் ஸ்கைரூட் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் ராமன்-II ராக்கெட் எஞ்சின் சோதனை வெற்றி!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட் எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடந்திருக்கிறது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்கைரூட், தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் (ஐபிஆர்சி) நடத்திய ராக்கெட்-என்ஜின் சோதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் இருக்கும் திரவ உந்துதல் சோதனை வசதி மூலம் வெள்ளிக்கிழமை இந்தச் சோதனை நடைபெற்றது. ஸ்கைரூட் வடிவமைத்த 820 நியூட்டன் (கடல் மட்டம்) மற்றும் 1,460 நியூட்டன் (வெற்றிடம்) உந்துதலை உருவாக்கக்கூடிய ராமன்-II என்ஜின் இஸ்ரோ வளாகத்தில் சோதிக்கப்பட்டது என இஸ்ரோவின் பெங்களூரு அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ராமன்-II எஞ்சின் மீளுருவாக்கம் மூலம் குளிரூட்டப்பட்ட இயந்திரம், சேர்க்கை உற்பத்தி நுட்பங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. மோனோ மெத்தில் ஹைட்ரஸைன் மற்றும் நைட்ரஜன் டெட்ராக்சைடு ஆகியவற்றை உந்துசக்தியாகப் பயன்படுத்துகிறது. 10-வினாடி சோதனையில் எதிர்பார்த்த செயல்திறனை வெற்றிகரமாக அடைந்துள்ளது.
ஸ்கைரூட் அதன் ஏவுகணை வாகனமான விக்ரம்-I ராக்கெட்டின் நான்காவது கட்டத்தில் ராமன்-II இன்ஜினை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. கருவி அமைப்புகளும் எதிர்பார்த்தபடி செயல்பட்டன. துல்லியமான சோதனை முடிவுகள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.
நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை மேம்படுத்துவதில் தனியார் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் (NGEs) பங்களிப்பை அனுமதிக்க இஸ்ரோ முடிவு செய்திருப்பதை அடுத்து இந்த் சோதனை நடைபெற்றுள்ளது. ராமன்-II இன்ஜின் திறன்களை மேலும் சரிபார்க்கவும், செம்மைப்படுத்தவும் கூடுதல் சோதனைகளைத் தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது.