Southwest Monsoon Arrives 3 Days Early In Andaman And Nicobar Islands

அந்தமான்-நிகோபர் தீவு, ஒட்டுமொத்த தெற்கு அந்தமான் பகுதிகளில் 3 நாட்களுக்கு முன்பாகவே தென் மேற்கு பருவ மழை இன்று தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் கே.ஜி. ரமேஷ் டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், “ வங்காள வரிகுடா கடலின் சில பகுதிகள், நிகோபர் தீவுகள், ஒட்டுமொத்த தெற்கு அந்தமானின் பகுதிகள், வடக்கு அந்தமான் ஆகிய பகுதிகளில் தென் மேற்கு திசையில் இருந்த வீசும் காற்று வலுவடைந்து, ஆழமாக வீசுகிறது. அதிகமான மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்து வருகிறது. இதனால், 3 நாட்களுக்கு முன்பாகவே இன்று(நேற்று)தென் மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டது. 

இதேபோல கேரளாவிலும் முன்கூட்டியே தென் மேற்கு பருவமழை தொடங்குமா என்று இப்போதே கூற இயலாது. அதேசமயம், வழக்கமாகத் தொடங்கும் ஜூன்1-ந்தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அந்தமான் நிகோபர் தீவுகளில் முன்கூட்டியே தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது என்பதற்காக, கேரளாவிலும் தொடங்கும் எனக் கூற இயலாது’’ எனத் தெரிவித்தார்.

வழக்கமாக அந்தமான் நிகோபர் தீவுகளில் தென் மேற்கு பருவக்காற்று மழை மே 17-ந்தேதிதான் தொடங்கும், ஆனால், வழக்கத்துக்கு மாறாக 3 நாட்கள் முன்பாகவே இன்று தொடங்கிவிட்டது.

தனியார் வானிலை மையமான ஸ்கைமெட் ஆய்வகத்தின் தலைம வானிலை ஆய்வாளர் மகேஷ் பலாவத் கூறுகையில், “ கேரளாவி் ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதிகபட்சமாக 2 நாட்கள் தாமதாகும். தென் மேற்கு வங்கக் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் பல பகுதிகள், அந்தமானின் பல பகுதி, அந்தமான் நிகோபர் தீவுகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் ஆகியவற்றில் பருவமழை அடுத்த 72 மணி நேரத்தில் தொடங்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன’’ எனத் தெரிவித்தார்.