South west monsoon begins few days early
தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் தென் மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை என இருபருவ காலங்களில் அதிக மழையைப் பெறும். தென் மேற்கு பருவ மழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் அதன் பின் வடகிழக்கு பருவ மழை டிசம்பர், ஜனவரி மாதம் வரையிலும் நீடிக்கும்.
தென் மேற்கு பருவ மழையானது கேரளா, கர்நாடக, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடங்கி பின்னர் வட இந்தியா முழுவதும் பரவும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவ மழையால் தான் 80 சதவீத மழை கிடைக்கும்.

கடந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை ஜூன் 8-ந்தேதி தொடங்கியது. ஆனால் சராசரி அளவை காட்டிலும் குறைவாகவே பெய்தது. இதற்கிடையே இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
வருகிற 17-ந் தேதி வாக்கில் அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அதன் பிறகு அரபிக் கடல் கேரளா பகுதியை 2 வாரத்தில் சென்றடைந்து மழை தீவிரம் அடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா விவசாயிகளின் முக்கிய பாசன அணையான மேட்டூர் அணைக்கு தென் மேற்கு பருவ மழையின் போதுதான் நீர் வரத்து அதிகம் இருக்கும். கர்நாடகா, கேரளாவில் மழை தீவிரம் அடைந்தால் அணை நிரம்பி விடும். இல்லையெனில் வட கிழக்கு பருவ மழையைத்தான் நம்பி இருக்க வேண்டும்.
ஆனால் இப்போது வானிலை மைய தகவல்கள் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.
