Sonia Gandhi Writes To PM Modi Pledging Congress Support On This Proposal

நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜனதா கட்சிக்கு தற்போது பெரும்பான்மை இருப்பதால், நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இட ஒதுக்கீடு மசோதா

கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மகளிருக்கு மாநில சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா கொண்டு வரப்பட்டது.

மக்களவையில் நிறைவேறவில்லை

இந்த மசோதா மாநிலங்கள் அவையில் 2010ம் ஆண்டு, மார்ச் 9-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் கொண்டு வரப்பட்ட போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் கடுமையாக எதிர்த்தலால் நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டது.

கோரிக்கை

இந்நிலையில் இப்போது ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிக்கு, மக்களவையில் பெரும்பான்மை பலம் இருக்கிறது. ஆதலால், இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பா.ஜனதா கட்சி நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம்

சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது- 

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதிமாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டதை நான் உங்களுக்கு நினைவு கூறுகிறேன். ஆனால், மக்களவையில் சில காரணங்களுக்காக நிறைவேற்றப்படவில்லை. 

ஆனால், தற்போது மக்களவையில் உங்கள் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மகளிருக்கு அதிகாரமளித்தலில் இந்த மசோதா முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவு அளிக்கும். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி, முதன்முறையாக, பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தார். அந்த மசோதா கடந்த 1989ம் ஆண்டு திருத்தங்களுடன் இரு அவைகளிலும் நிறைவேறியது உங்களுக்கு நினைவில் இருக்கும் என நம்புகிறேன். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலியுறுத்தல்

முன்னதாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மதிப்பளித்து நிறைவேற்ற வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வலியுறுத்தி இருந்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆளும் பா.ஜனதா அரசு நிறைவேற்ற வேண்டும் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.