பெங்களூரு வரும் சோனியா காந்தி! பாஜகவுக்கு எதிராக கூடும் 24 எதிர்க்கட்சிகள்!

ஜூலை 17-18 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Sonia Gandhi to attend Bengaluru Opposition meet, 24 parties to attend

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வரும் ஜூலை 17-18 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்களின் இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம், பீகாரின் பாட்னாவில் ஜூன் 23 அன்று நடைபெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால், பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், சரத் பவார் இக்கூட்டத்தில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக உள்ள சோனியா காந்தி இதில் கலந்துகொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிக்கலான பிரச்சினைகளை எளிதில் தீர்க்கப்படுவதற்கு அவரது இருப்பு உதவும் என்று காங்கிரஸ் நம்புகிறது. 24 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜூலை 17ஆம் தேதி பெங்களூருவில் சந்தித்துக்கொள்கின்றனர். முறையான கூட்டம் அடுத்த நாள் நடைபெற உள்ளது. முதல் நாளில் பேச்சுவார்த்தை முடிந்ததும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார்

மகாராஷ்டிராவில் சரத் பவாருக்கு எதிராக அஜித் பவாரின் கிளர்ச்சியைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (என்சிபி) பிளவுபட்டது. இதனால், ஜூலை 13-14 தேதிகளில் நடைபெற இருந்த பெங்களூரு கூட்டம் ஜூலை 17-18 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த திடீர் கிளர்ச்சி பீகாரிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைபடுவதற்கான சாத்தியத்தை யோசிக்க வைத்திருக்கிறது.

இருப்பினும், பெங்களூரு கூட்டத்தில் பாட்னா கூட்டத்தில் கலந்துகொள்ளாத எட்டு புதிய கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க), கொங்கு தேச மக்கள் கட்சி (கொ.தே.ம.க.), விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (பு.சோ.க), அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்) மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் புதிதாக அழைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான திட்டம், முக்கியப் பிரச்சினைகள் மற்றும் அதைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து கட்சிகள் விவாதிக்கும். நாடு முழுவதும் பாஜகவை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் வியூகத்தைக் கட்டமைப்பது ஆகியவை பற்றியும் தலைவர்கள் விவாதிப்பார்கள். வேறுபாடுகளைக் களைவதற்கு மாநில வாரியாக குழுக்கள் அமைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கு 15 எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருந்தன. ஆம் ஆத்மி கட்சி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது கடினம் என்று வலியுறுத்தியது. டெல்லி அவசரச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்காமல் இருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இணைவதற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டத்தை முறியடிக்கும் நோக்கில், அதே நாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் கூட்டத்திற்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் கட்சியின் பலத்தைக் காட்டும் வகையில் இந்தக் கூட்டம் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios