அதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை!
அதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்த சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்
காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி இடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ஆலோசிக்க மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம், காலை 10.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று முன்தினம் மக்களவையில் தொடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசினர். இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் பதிலளித்து பேசினர். தொடர்ந்து, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு, பிரதமர் மோடி நேற்று மக்களவையில் பதிலுரை ஆற்றினார்.
பிரதமர் பேசிக் கொண்டிருக்கும் போதே, மணிப்பூர் விவகாரம் குறித்து அவர் பேசவில்லை என எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால், குரல் வாக்கெடுப்பு மூலம் அவர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
தமிழ்நாட்டு பக்கம் திரும்பிய நாடாளுமன்றம்: திமுகவை டார்கெட் செய்யும் பாஜக அமைச்சர்கள் - என்ன காரணம்?
முன்னதாக, பிரதமர் மோடி பதிலளித்து பேசுவதற்கு முன்பு பேசிய காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, அவை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கையில், இடையூறு விளைவித்ததாக கூறி அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, அவரை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பேசும்போது அதிர் ரஞ்சன் சவுத்ரி பலமுறை தொந்தரவு செய்து வருகிறார். பலமுறை எச்சரித்தாலும் இது வாடிக்கையாகி விட்டது. தேசத்தின் நற்பெயரை கெடுக்க அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும் அவர் கூறினார். வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் அவரது தவறான நடத்தை காரணமாக, இந்த விஷயத்தை மேலதிக விசாரணைக்காக சபையின் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பவும், குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை எம்.பி.யை இடைநீக்கம் செய்யவும் தீர்மானத்தை முன்மொழிவதாக பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படும் நிலையில், அவரது இடைநீக்கம் குறித்து ஆலோசிக்க, மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறுகையில், “இது ஜனநாயக விரோதமானது. மிகப்பெரிய கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கேள்வி கேட்காமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை. நாடாளுமன்ற நடைமுறைகளை மோடியும், அமித் ஷாவும் அழித்துவிட்டனர். இதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் போராடுவோம்.” என தெரிவித்துள்ளார்.