பிரான்சில் இருந்து கடத்த முயன்ற ரூ.200 கோடி மதிப்புள்ள பாம்பு விஷத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் 4 பேர் தங்கியிருந்தனர். அவர்களது நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து ஓட்டல் ஊழியர்கள் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார், சம்பவ, சம்பந்தப்பட்டவர்கள் தங்கியிருந்த அறையில் நுழைந்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியபோது, 5 பாட்டில்களில் திரவம் போன்று இருந்தது. அதை பற்றி கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், பாட்டில்களிலும் நல்லப்பாம்பு விஷத்தை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.200 கோடியாகும். இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பைகுந்தாப்பூர் வனத்துறை ரேஞ்சர் சஞ்சய் தத்தா கூறுகையில், “பிரான்சில் இருந்து வங்கதேசம் வழியாக மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பலூர்கத் பகுதிக்கு இந்த விஷத்தை கொண்டு செல்ல முயன்றுள்ளனர். பிடிபட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.