Snake drunk water video viral on social media

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள், பாம்பைக் கண்டால் நிச்சயம் பயத்தால் நாம் தண்ணீர் குடிப்போம்.

ஆனால், கொடியவிஷம் கொண்ட மிக அபாயகரமான ராஜநாகம், பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

பொதுவாக ராஜநாகங்கள் மனிதர்களைவிட்டே ஒதுங்கிதான் வாழும். மனிதர்கள் வந்தாலே பயந்து, தன்னைக்காத்துக்கொள்ள ஓடி ஒளிந்து கொள்ளும், இருந்தும் அவ்வப்போது சிலநேரங்களில் இறைதேடி வெளியே வரும்போது பிடிபடுவதுன்டு.

அந்த வகையில், மனிதர்களுக்கு ஒருமணிநேரத்தில் சாவை உறுதிசெய்யும் விஷம் கொண்ட ராஜநாகங்கள் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அதிகம் வாழ்கின்றன. இப்போது தென் மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலுவுவதால், காட்டுவிலங்குகள் உணவுக்காக மனிதர்கள் இருப்பிடத்துக்குள் வருவதைப் போல், பாம்புகளும் வரத்தொடங்கியுள்ளன.

கர்நாடகத்தின் உத்தர கன்னடம் மாவட்டம், கைய்கா கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 12 அடிநீள முள்ள ராஜநாகம் ஒன்று மக்களிடம் பிடிபட்டுள்ளது. அந்த நாகத்தை வனத்துறையினர் வந்து மீட்டு தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

வெயில் உக்கிரமாக அடித்ததையடுத்து, அந்த ராஜநாகத்தின் வாலை ஒரு வனஅலுவலர் பிடித்துக்கொள்ள, மற்றொரு ஊழியர் ராஜநாகத்தின் தலையில் தண்ணீர் ஊற்றியுள்ளார். அதற்கு பேசாமல் இருந்த ராஜநாகம் நாக்கை நீட்டி அந்த தண்ணீரை குடிக்கத் தொடங்கியது.

இதையடுத்து, அந்த அலுவலர், பாட்டிலில் இருந்த தண்ணீரை குழந்தைக்கு கொடுப்பது போல், பாம்பின் வாய்அருகே கொண்டுசென்று ஊற்றினார். அந்த ராஜநாகம் அந்த நீரை தனது தாகம் தீரும்வரை மெதுவாக குடித்து தீர்த்துக்கொண்டது.

இந்த சம்பவத்தை பார்த்த மற்ற வனஅலுவலர்களுக்கு ஆச்சர்யமாக இருந்துள்ளது. ராஜநாகம் மனிதர்களை அருேக வரவிடாமல் தடுக்கும் தன்மை கொண்டது. இங்கு அமைதியாக இருந்து ராஜநாகம் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதன்பின், அந்த பாம்பை பிடித்து, வனஉயிரியல் காப்பகத்துக்கு வனஅலுவலர்கள் கொண்டு சென்றனர். பாட்டிலில் ராஜநாகம் தண்ணீர் குடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. டுவிட்டர், பேஸ்புக்கிலும் இந்த விடியோப் பார்த்தவர்கள் பாம்புக்கு தண்ணீர் கொடுத்த அலுவலரின் செயலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.