கேரள மாநிலம் இந்த ஆண்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கேரளா மீண்டெழுந்துவருவதற்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருற்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் எர்ணாகுளம் டவுன் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் அப்பகுதியை சேர்ந்த லியானா தேஜஸ் என்ற சிறுமி வேகமாக ஓடி சென்று தன்னுடைய உதவியை வழங்கினார். 

தன்னுடைய உண்டியல் சேமிப்பை நிவாரண உதவிக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு வழங்கிய சிறுமி, தன்னுடைய காதிலிருந்த கம்மல்களையும் கழற்றி கொடுத்தார். யாரும் எதிர்பாராத நிகழ்வாக சிறுமி தன்னுடைய கம்மல்களை கழற்றி கொடுத்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக பினராயி விஜயன் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், “மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம்.எம். லாரன்ஸின் 90 வது பிறந்தநாளில் கலந்து கொண்டு நான் திரும்பி வரவிருந்தபோது சிறுமி என்னை நோக்கி ஓடிவந்தார்.  

சிறுமி தன்னுடைய உண்டியலில் இருந்த சேமிப்பை என்னிடம் ஒப்படைத்தார். நான் செல்லவிருந்த போது, இதுவும் எனக்கூறி தன்னுடைய காதுகளில் அணிந்திருந்த கம்மல்களை கழற்றி எனக்குக் கொடுத்தார். லியானாவின் இந்த செயலுக்கு எந்தவிதமான பாராட்டுகளும் போதுமானதாக இருக்காது. அவரைப் போன்ற குழந்தைகளைப் பார்ப்பது ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம், எங்கள் குழந்தைகள் புதிய கேரளாவின் சொத்துக்கள்,”என்று பதிவிட்டுள்ளார்.

லியானா சென்ற ஆண்டு வெள்ளத்தின் போதும் தன்னுடைய சேமிப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.