slinder gas rate increased 47 rupees on one day

மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.47.50 காசுகள் உயர்த்தப்பட்டதால், மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், மானியத்துடன் கூடிய சமையல் சிலிண்டர் விலை ரூ.1.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு வைத்து இருக்கும் மக்களுக்கு ஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களை மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. நாட்டில் மொத்தம் 18.11 கோடி மக்கள் சமையல் சிலிண்டருக்கான மானியத்தை பெற்று வருகிறார்கள். 

மானிய விலையில் மக்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்களை அரசு வழங்குவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்யும் விதமாக, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான விலையை மாதம் தோறும் 2 ரூபாய் உயர்த்திக் கொள்ளலாம் என அரசு கடந்த ஆண்டு ஜூலையில் அறிவித்தது.

அதன்படி, கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை 10 முறை என ஒட்டுமொத்தமாக 20 ரூபாய் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சமையல் சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் மானியம் முழுவதையும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மாதமும் மானியவிலை சமையல் சிலிண்டர் விலையை 4 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

கடந்தஆண்டு ஜூன் மாதம் மானியவிலை சமையல் சிலிண்டர் விலை ரூ.419க்குடெல்லியில் விற்பனையான நிலையில், ஜி.எஸ்.டிக்கு பின் ரூ.487.18 க்கு விற்பனையாகிறது. 

இந்நிலையில், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.1.50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் ரூ. 487.18க்கு விற்கப்பட்ட நிலையில் இனி ரூ.488.68 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ந்தேதி ரூ. 7 உயர்த்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது, சென்னையில் மானிய சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ.609க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி ரூ.1.50 காசுகள் உயர்த்தப்படும்.

ரூ.47 உயர்வு

அதேசமயம், மானியம் அல்லாத சிலிண்டர்கள் விலை ரூ. 47.50காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.மானியம் அல்லாத சமையல் எரிவாவு சிலிண்டர் விலை கடந்த சனிக்கிழமை ரூ. 609 ஆக இருந்தது. ஆனால் அக்டோபர் 1-ந்தேதியான ஞாயிற்றுக்கிழமை முதல் ரூ.656.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.47.50 அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே சென்னையில் அக்டோபர் 1ம் தேதி முதல் முன்பதிவு செய்த பயனாளிகளுக்கு ரூ.656.50 என்ற விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதற்கிடையே மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 3 மாதங்களில் ரூ.123.50 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது . சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆகஸ்டு மாதம் ரூ.533 ஆக இருந்த நிலையில், அது செப்டம்பர் மாதம் ரூ.73.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.609 ஆக அதிகரித்தது. தற்போது மீண்டும் ரூ.47.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.656.50 ஆக உயர்ந்துள்ளது.

ஏன் இந்த விலை உயர்வு?

இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படும் விளக்கம் என்னவென்றால், “ இந்த சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு என்பது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இருக்கும். பெட்ரோல், டீசல் விலை என்பது சர்வதேச கச்சாஎண்ணெய் விலையில் முடிவு செய்யப்படுகிறது. ஆனால், சமையல் எரிவாயு விலை என்பது சர்வதேச புடேன் மற்றும் புரோபேன் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. புடேன் மற்றும் புரோபேன் இணைத்து எல்.பி.ஜி. உருவாக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் நுகர்வு அதிகரிக்கும் போது, தேவை அதிகரித்து,விலை உயரும். கடந்தஆண்டு மார்ச் மாதம் அதிகபட்சமாக சமையல் சிலிண்டர் விலை ரூ.746.50 காசுகள் வரை உயர்ந்து பின், ரூ.533க்கு குறைந்தது. ஆதலால், மார்ச் மாதத்துக்கு பின் குறையலாம் எனத் தெரிவித்தனர்.