sitaram yetchury speech
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே சமரசப் பேச்சு மூலம் தீர்க்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிய யோசனை சரியானது அல்ல. இது சட்டத்தினால் மட்டுமே தீர்க்கமுடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் சீதாராம் யெச்சூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
சட்டத்தின் மூலம் தீர்வு
அயோத்தி உள்ள சர்ச்சைக்குரிய 27.7 ஏக்கர் நிலம் தொடர்பான பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்க்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. என்னைப் பொருத்தவரை இது சட்டத்தினால் தீர்க்கப்பட வேண்டும், அரசியல் ரீதியாக தீர்வு காணக் கூடாது. அவ்வாறு தீர்க்கப்பட்டால் அதை வரவேற்கிறேன்.
ஊசலாட்டம்
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஊசலாட்டத்தில் சிக்கி இருப்பது துரதிருஷ்டவசமானது. கடந்த 1992ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில்தான் பாபர்மசூதி இடிக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது இருந்தே காங்கிரஸ் ஊசலாட்டத்தில் இருக்கிறது.
சிறுபான்மையினர்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆட்சியில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். பசு பாதுகாப்பு என்ற பெயரில், சட்டவிரோத இறைச்சிக்கூடங்களையும், இறைச்சிக்கடைகளையும், சில்லரை கடைகளையும், குறிவைத்து தாக்கி வருகிறார்கள்.
தீர்மானம்
கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக தீர்மானம் போடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாதொண்டர்களால், மார்க்சிஸ்ட் தொண்டர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
செல்லாத ரூபாய் நோட்டுகள் எவ்வளவு?
டுவிட்டரில் சீதாராம் யெச்சூரி நேற்று வெளியிட்ட பதிவில், “ ரூபாய் நோட்டு தடைக்குப் பின், இதுநாள் வரை செல்லாத ரூபாய் நோட்டுகள் எவ்வளவு வங்கியில்டெபாசிட் செய்யப்பட்டன என்பது குறித்து தேசியஜனநாயகக் கூட்டணி அரசு தெரிவிக்கவில்லை. மோடி அரசு திறமையற்ற அரசா? அல்லது ரூபாய் நோட்டு தடைக்கு உடந்தையாக இருந்ததா?’’ எனத் தெரிவித்துள்ளார்.
