காஷ்மீர் சென்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ உள்ளிட்ட பிரிவுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும், காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து, அங்குள்ள தலைவர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதிக்க டெல்லியில் இருந்து காஷ்மீர் சென்ற காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், அவர் டெல்லிக்கு திரும்ப சென்றார். 

இந்நிலையில், காஷ்மீரில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் இன்று காலை காஷ்மீர் சென்றனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இறங்கிய அவர்கள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து, மீண்டும் அவர்கள் டெல்லி திரும்பினர்.