கொரோனாவால் உலகளவில் 41 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித குலத்திற்கே பெரும் சவாலாக கொரோனா திகழ்கிறது. கொரோனாவை எதிர்கொள்ள நாடு, மதம், இன பேதமின்றி மனித குலமே ஒன்றிணைந்து அதற்கெதிராக போராடிவருகிறது. 

கொரோனாவுக்கு எதிரான பிரார்த்தனையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்து மத மந்திரங்கள் ஓதப்பட்டது. இதுபோன்ற பேரிடர் காலத்தில் தான் மனிதர்கள், எந்த பேதமுமின்றி மனிதர்களாக ஒன்றிணைகிறார்கள். அந்த வகையில், மதத்தை விட மனிதமும் கடமையும் தான் முக்கியம் என்பதை உணர்த்தும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. 

சீக்கிய மதத்தில் ”கேஷ்” என்ற ஒரு நம்பிக்கையுள்ளது. அதன்படி சீக்கியர்கள் முடி வெட்டக்கூடாது. தலைமுடியை சுருட்டி தலைப்பாகை அணிந்துகொள்வார்கள். அதேபோலவே தாடியையும் ஷேவ் செய்ய மாட்டார்கள். அது அவர்களின் மத நம்பிக்கை. 

இந்நிலையில், சீக்கிய மதத்தை சேர்ந்த சஞ்சீவ் சிங் சலுஜா என்ற மருத்துவர் கனடா நாட்டில் மெக்கில் யுனிவர்சிட்டி ஹெல்த் செண்டர் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்துவருகிறார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவரும் அவரால், தாடி இருப்பதால், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த முடியவில்லை. 

மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் அவர் சிகிச்சையளிக்க முடியாது. அதே நேரத்தில் தாடியை ஷேவ் செய்வது அவரது மத நம்பிக்கைக்கு எதிரானது. இந்நிலையில், மத நம்பிக்கையா அல்லது கடமையா எது முக்கியம் என்பதில் கடமை தான் முக்கியம் என்று தீர்மானமாக முடிவெடுத்த மருத்துவர் சிங் சலுஜா, அவரது உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடமும் தெரிவித்துவிட்டு, மருத்துவ பணிகளை தொடர்வதற்காக ஷேவ் செய்துகொண்டார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் சிங் சலுஜா, சீக்கிய மதத்தில் கேஷ் என்ற போதனை இருப்பதை போலவே “சேவா” என்பதும் போதிக்கப்படுகிறது. அதாவது மனித குலத்திற்காக சேவை செய்வது என்பதுதான் சேவா. எனவே நான், “கேஷ்”ஐ விட “சேவா”விற்கு முக்கியத்துவம் கொடுத்து, ஷேவ் செய்து கொண்டேன். மக்களுக்காக எனது கடமையை செய்வதுதான் முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.