டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டது நிர்வாகரீதியான நடவடிக்கையே எனவும், அனைத்தையும் ஊடகங்களிலும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து, சிறையில் உள்ள சசிகலா, தனது பங்களாவில் இருப்பது போலவே ஆடம்பரமாக இருப்பதற்கு,சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக, கர்நாடக சிறைத்துறை அதிகாரி டிஐஜி ரூபா புகார் செய்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டை அடுத்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார்.  மேலும் இதுகுறித்து ஊடகங்களில் இனி பேச வேண்டாம் எனவும் உத்தரவிட்டார். 

ஆனால் நேற்று முன்தினம் டிஐஜி ரூபா செய்தியாளர்களிடம் பேசும்போது, பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாக குற்றம் சாடடியிருந்தார்.

இது தொடர்பாக கர்நாடக அரசு தலைமை செயலாளருக்கு ரூபா கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு தான் ஒத்துழைப்பதாகவும் ரூபா கூறியிருந்தார்.

முதலமைச்சர் உத்தரவையும் மீறி தான் பேட்டி அளித்தற்கு எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை என ரூபா தெரிவித்தார். 

இதைதொடர்ந்து கர்நாடக முதலமைச்சரின் உத்தரவுப்படி, பரப்பன அக்ரஹார சிறையில், விசாரணை இன்று துவங்கி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா, போக்குவரத்து துறை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சத்தியநாராயணாவுக்கு பதிலாக ஏ.எஸ்.என். மூர்த்தி கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டிஐஜி ரூபா பெங்களூரு சிட்டியின் போக்குவரத்து ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கைதிகளுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ரூபாவின் பணியிடமாற்றம் குறித்து முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.

டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டது நிர்வாகரீதியான நடவடிக்கையே எனவும், அனைத்தையும் ஊடகங்களிலும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் கர்நாடக அவர் தெரிவித்தார்.

ஊடகங்களில் அனைத்தையும் சொன்னதால் தான் ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.