siddhu talks about congress victory
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி, மீண்டும் காங்கிரஸ் மறுமலர்ச்சி அடைவதை காட்டுகிறது. முதல்வர் பாதல் குடும்பத்தின் அட்டூழியம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்குபின்
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து இருந்தது.சிரோன்மணி அகாலிதளம், பாரதிய ஜனதா கூட்டணியே அங்கு ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் அகாலிதளம், பா.ஜனதா கூட்டணி அரசின் மோசமான நிர்வாகம் குடும்ப ஆட்சி, ஊழல் ஆகியவற்றுக்கு மக்கள் பதிலடி கொடுத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளனர்.

பேட்டி
பாரதியஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி.யும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருமான கிரிக்கெட் வீரர் சித்து வெற்றி குறித்து நிருபர்களுக்கு அமிர்தசரஸ் நகரில் பேட்டி அளித்தார்.
மறுமலர்ச்சி
அப்போது அவர் கூறுகையில், “ மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி, மீண்டும் காங்கிரஸ் கட்சி மீண்டும் மறுமலர்ச்சி அடைகிறது என்பதன் தொடக்கமாக நான் பார்க்கிறேன். இங்கிருந்து காங்கிரஸ் கட்சி மறுமலர்ச்சி தொடங்கும். இங்கிருந்து கட்சி வலுப்பெற்று, நாடுமுழுவதும் பரவட்டும்.
புத்தாண்டு பரிசு
எங்கள் கட்சியின் வெற்றி என்பது மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் காட்டுகிறது. எங்கள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நாங்கள் அளிக்கும் புத்தாண்டு பரிசாகும்.

அழிக்கப்பட்டது
அகாலிதளத்தின் அழிவுதான் இது. பாதல் குடும்பத்தின் அராஜகம் உச்சத்தை தொட்ட நிலையில் அந்த கொடுமைகளையும், அட்டூழியத்தையும் மக்கள் உடைத்து, அழித்துள்ளனர். தங்கள் சொந்த கஜானாவை நிரப்பிக்கொள்ள மாநிலத்தை திருடர்கள் கொள்ளையடித்தனர்.
பழிவாங்கமாட்டோம்
பஞ்சாப் மாநிலத்தின் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் உழைக்கும். இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால், இனி மாநிலத்தின் வளர்ச்சிக்காக இடைவிடாது உழைக்கும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் செயல்படாது.
நிறைவேற்றுவோம்
மக்கள் அதிகமான எதிர்பார்ப்புகள் எங்கள் மீது வைத்துள்ளார்கள், அதை நிறைவேற்ற நாங்கள் உழைப்போம். விவசாயிகள் தற்கொலையையும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வளர்ச்சி விதைகள்
பஞ்சாப்புக்கு ஆதரவாக மக்கள் இறுதியான தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள். வளர்ச்சி, பூரிப்பின் விதைகள் தூவப்பட்டுள்ளன. நல்ல நிர்வாகத்துக்கும் எடுத்துக்காட்டாக பஞ்சாப் திகழும், காலியான கஜானாக்கள் நிரப்பப்படும்.
கெஜ்ரிவால் நோக்கம் தவறு
தேர்தல் பிரசாரத்தின் போது ஆம்ஆத்மி கெஜ்ரிவால் தவறான கண்ணோட்டத்தை பரப்பினார். ஆனால், உண்மைகளை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. கெஜ்ரிவாலின் உள்நோக்கம் தவறானது. அனைத்தும் தனக்கானது என்றார் கெஜ்ரிவால், ஆனால், பாதல் குடும்பத்தினரோ அனைத்தும் தங்கள் சொந்தநலனுக்கானது என்றனர்'' எனத் தெரிவித்தார்.
