நாட்டிலேயே கர்நாடாகா தான் மதச்சார்பற்ற மாநிலம் என்று அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

கர்நாடாவில் காலியாக இருந்த குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைதேர்தல் அண்மையில் நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர்கள், சேகவமூர்த்தி, மகாதேவ் பிரசாத் ஆகியோர்  பா.ஜ.க. வேட்பாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 

இதற்கிடையே தேர்தல் வெற்றி குறித்து அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "இது எனக்கும் எடியூரப்பாவுக்கும் இடையேயான தேர்தல் அல்ல. இந்தத் தேர்தல் அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பும் அல்ல.

அரசு மீது மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. தேர்தல் பரப்புரையின் போது என்னை மட்டுமே இலக்காகக் கொண்டு பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்து வந்தனர். இது மதச்சார்பற்ற கர்நாடாக. உத்தரப்பிரதேசத்தை போன்று அல்ல.

மனித நேயமே எங்கள் பாரம்பரியம்.கார்நாடகாவைத் தொடர்ந்து மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்." இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.