பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குருத்வாரா சென்றபோது, அவரது ஷூவைப் பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டதாக வெளியான உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பகவந்த் மானும் இந்த விமர்சனங்களைக் கிண்டல் செய்து நிராகரித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஸ்ரீ முக்த்சர் சாகிப் குருத்வாராவுக்குச் சென்றபோது, அவரது ஷூவை பாதுகாக்க இரண்டு காவலர்களை நியமிக்கக் கோரும் உத்தரவு வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் இந்த உத்தரவைப் பயன்படுத்தி ஆளும் ஆம் ஆத்மி அரசை (AAP) கடுமையாகத் தாக்கி வருகின்றன. ஆனால், பஞ்சாப் காவல்துறை இந்தச் செய்திகளை "முற்றிலும் போலியானவை" என்று கூறி நிராகரித்துள்ளது.

காலணிக்குக் காவல்?

முக்த்சர் காவல் துறையால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அந்த உத்தரவில், தலைமை காவலர் ரூப் சிங் மற்றும் காவலர் சர்பத் சிங் ஆகியோர் சாதாரண உடையில், 7-ஆம் எண் நுழைவாயிலில் பஞ்சாப் முதல்வரின் ஷூவைப் பாதுகாக்கும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. சில மணி நேரங்களிலேயே, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். காவல் துறையைத் தனிப்பட்ட பணியாளர்களாக மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் தாக்குதல்

காவல்துறையிடன் இந்த உத்தரவு ஆம் ஆத்மி அரசின் 'விஐபி கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாகக் உள்ளது என்று விமர்சிக்கின்றனர். மத்திய அமைச்சர் ரவ்னீத் பிட்டு, "இந்த உத்தரவு முதல்வரின் காலணிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதைக் காட்டுகிறது" என்று கிண்டல் செய்தார்.

சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. பர்கட் சிங், "இப்போது முதல்வரின் காலணிகளுக்கும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பகவந்த் மான் கிண்டல்

இதற்கிடையில், குரு கோவிந்த் சிங் ஸ்டேடியத்தில் ரூ.138.83 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு (AMRUT 2.0 திட்டம்) அடிக்கல் நாட்டிப் பேசிய முதல்வர் பகவந்த் மான், இந்த விமர்சனங்களை நிராகரித்தார்.

"இந்த அரசியல் எதிரிகளிடம் பஞ்சாப் வளர்ச்சிக்கான செயல்திட்டம் ஏதும் இருக்கிறதா? அவர்களுக்கு செருப்புகள் ஷூக்களும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டன," என்று பகவந்த் மான் கேலி செய்தார்.