சென்னை கொண்டித்தோப்பு பாஷியக்காரன் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் ஜெயின் (43). நகை வியாபாரி. திருமணம் ஆகாத இவருக்கு வரன் தேடி வந்தனர். இதையொட்டி சென்னை கொடுங்கையூரை சேர்ந்த லட்சுமி என்ற தரகரை அணுகினர்.

அவர், ஆனந்துக்கு திருமணம் செய்து வைக்க ரூ.2 லட்சம் கமிஷனாக கேட்டுள்ளார். ஆனால், அவர்களுக்குள் பேரம் பேசி ரூ.1.25 லட்சம் கொடுத்துள்ளனர். இதையடுத்து புனேயே சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண்ணை, ஆனந்துக்கு திருமணம் செய்து வைக்க முடிவானது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அவர்களுக்கு சென்னை என்எஸ்சி போஸ் ரோட்டில் உள்ள குமரக்கோட்டம் கோயிலில் திருமணம் நடந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஆனந்த், வியாபாரம் சம்பந்தமாக வெளியே சென்றார். மதியம் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, தூங்கினார். மாலையில், ஆனந்தின் பெற்றோர் எழுந்து பார்த்தபோது, ஜெயஸ்ரீயை காணாமல் திடுக்கிட்டனர்.

இதையடுத்து ஆனந்துக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அதன்பேரில் அவர் வந்து பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த பணம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளையும், தனது உடைகளையும் எடுத்து கொண்டு அவர் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து ஏழுகிணறு போலீசில், ஆனந்த் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, புரோக்கர் லட்சுமியை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரிக்கின்றனர். திருமணம் ஆன 20 வது நாட்களில் புது மணப்பெண் இது போன்ற மோசமான செயலில் ஈடுபட்ட சம்பவம் அவர்களையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.