ரூபாய் நோட்டு தடை என்ற அணுகுண்டை வீசி நாட்டின் பொருளாதாரத்தை ஹிரோஷிமா, நாகசாகி போல பிரதமர் மோடி சீரழித்துவிட்டார் என சிவசேனாகட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் ரூபாய் நோட்டு செல்லாத நடவடிக்கை குறித்தும் மோடி மீதும் கடும் விமர்சனங்கள் முன்வைத்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மோடி இப்போது யாருடைய பேச்சையும் கேட்கும் மன நிலையில் இல்லை. காதுகேட்காத, கண் தெரியாதவர்கள் அமைச்சரவையில் அமைச்சராகவும், ரிசர்வ்வங்கியின் கவர்னராகவும் அதேபோல அமர்த்தியுள்ளார். இதனால், நாட்டின் பொருளாதாரமே ஆடிப்போய் உள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 40 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அசோசம் அமைப்பு தெரிவித்துள்ளது. வரும் காலத்தில் பிரச்னைகள் மேலும் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
இது ரூபாய் நோட்டு தடை என்ற அணு குண்டு முடிவை பிரதமர் மோடி நாட்டின் மீது வீசியுள்ளார். மோடியின் இந்த அணுகுண்டு முடிவு நாட்டின் பொருளாதாரத்தைஹிரோஷிமா, நாகசாகி போன்று சீரழித்துவிடும். நாட்டின் எதிர்காலத்தை பற்றி நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்.
விவசாயிகளின் முதுகெலும்பு உடைந்துள்ளது. அவர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க யாரும் இல்லை. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதித்ததன் அந்த வங்கிகள் ஊழல் நிகழும் இடம் என அரசு முத்திரை குத்தி விட்டது. வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளைமோசடியாளர்கள் போல சித்தரிக்கின்றனர். ஆனால், வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு விஜய் மல்லையா தப்பி விட்டார். ரூபாய் தடையால் வாழ்க்கை தடம்புரண்ட மக்களைப் பார்த்தால் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
