திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரின் சவாலை ஏற்ற காங். சிட்டிங் எம்.பி. சசி தரூர்!
திருவனந்தபுரம் வளர்ச்சி குறித்து விவாதிக்க வருமாறு பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் விடுத்த அழைப்பை காங்கிரஸ் வேட்பாளரும், சிட்டிங் எம்.பி.யுமான சசி தரூர் ஏற்றுக் கொண்டுள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் தொகுதியாக மாறியுள்ளது. காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி. சசி தரூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பாக ராஜீவ் சந்திர சேகர் களமிறக்கப்பட்டுள்ளார். பன்யன் ரவீந்திரனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி முன்னிறுத்தியுள்ளது. இதனால், அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
திருவனந்தபுரம் தொகுதியை காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே கவுரவப்போட்டியாக கருதுகிறது. மத்திய இணையமைச்சராக இருக்கும் ராஜீவ் சந்திரசேகருக்கு இது முதல் மக்களவைத் தேர்தல். சிட்டிங் எம்,பி.யான சசி தரூர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியை தன் வசம் வைத்துள்ளார். அவருக்கு அங்கு தனிப்பட்ட செல்வாக்கும் உள்ளது. தென் மாநிலங்களில் தனக்கிருக்கும் பின்னடைவை எதிர்கொள்ளவே திருவனந்தபுரம் தொகுதியில் ராஜீவ் சந்திரசேகரை பாஜக களமிறக்கியுள்ளது. இதனால் அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார். ஒரு வேளை அவர் தோல்வியடைந்தால் மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் அவர் பெரும் பின்னடைவை சந்திப்பார்.
மறுபுறம், சசி தரூர் வெற்றி பெற்றால், தொகுதியில் தனது தனிப்பட்ட செல்வாக்கை அவர் நிலைநிறுத்திக் கொள்வார். ஒருவேளை தனது சொந்த தொகுதியில் அவர் தோல்வியடைந்தால், தேர்தல் அரசியலில் இருந்து அவர் விலகவும் வாய்ப்புள்ளாது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் திருவனந்தபுரம் தொகுதி அனல் பறக்கிறது.
வீட்டு செலவை மிச்சப்படுத்தி காங்கிரஸ் வேட்பாளருக்கு நன்கொடை அளித்த பெண்கள்!
இந்த நிலையில், திருவனந்தபுரம் தொகுதியின் வளர்ச்சி குறித்து சசி தரூருடன் விவாதிக்க தயாராக இருப்பதாக ராஜீவ் சந்திரசேகர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த சவாலை உடனடியாக ஏற்றுக் கொண்ட சசி தரூர், எப்போது வேண்டுமானாலும் விவாதத்திற்கு தயார் எனவும், யார் விவாதத்தை தவிர்க்கிறார்கள் என்பது தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு தெரியும் எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.
“நான் விவாதத்தை வரவேற்கிறேன். ஆனால், இதுவரை விவாதத்தில் இருந்து தப்பித்துக் கொண்டிருப்பது யார் என்பது திருவனந்தபுரம் மக்களுக்குத் தெரியும். அரசியல் மற்றும் வளர்ச்சி குறித்து விவாதிப்போம் வாருங்கள்.” என சசி தரூர் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல், வகுப்புவாதம் மற்றும் பாஜகவின் 10 ஆண்டுகால வெறுப்பு அரசியலைப் பற்றி விவாதிப்போம். திருவனந்தபுரத்தின் வளர்ச்சி மற்றும் கடந்த 15 ஆண்டுகளில் நாம் செய்த காணக்கூடிய முன்னேற்றம் குறித்தும் விவாதிப்போம் எனவும் சசி தரூர் அழைப்பு விடுத்துள்ளார்.