காராஷ்டிராவில் கூட்டுறவு வங்கியில் ரூ.25,000 கோடி பண மோசடி செய்ததாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், அவரது மருமகன் அஜித் பவார் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

மகராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டில் நடந்த முறைகேடு காரணமாக அரசின் கருவூலத்துக்கு ரூ.25,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் மற்றும் 70 பேர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் அடங்குவர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அமலாக்கத்துறையினர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித்பவார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அடிப்படையாக கொண்டு அவர்கள் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. விரைவில் அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு சமீபத்தில் தான் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும், ஆளும் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் புதிய திருப்பமாக சரத்பவார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ப.சிதம்பரம், டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்த குறி சரத்பவாரை தூக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.