POCSO : ஆடைகளை கழட்டு.. காவல் நிலையத்திற்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை - தலைமறைவான சப்-இன்ஸ்பெக்டர்!
காவல் நிலையம் என்பது போலீசாருக்கு ஒரு கோவில் போன்றது, அந்த புனிதமான இடத்திலேயே இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுவது போலீசார் மீதான நம்பிக்கையை குறைத்துவிடுகிறது.
அசாம் மாநில காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் (டிஜிபி), ஜி.பி சிங் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, பிமான் ராய் என்ற காவல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அசாமின் நல்பாரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் அந்த அதிகாரி, மைனர் பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டிய நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு (POCSO) சட்டம், 2012ன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சிங் அறிவித்தார்.
என்ன நடந்தது?
சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட அந்த 17 வயது சிறுமி தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சற்று நேரத்தில், அருகில் இருந்த சில காவலர்கள் அவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் ஓர் இரவு முழுவதும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அந்த இருவரையும் லாக்கப்பில் வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில்தான் அந்த காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பிமான் ராய் என்ற காவல் அதிகாரி, அந்த 17 வயது சிறுமியிடம் பேச்சுக்கொடுக்க துவங்கியுள்ளார். ஆபாச வார்த்தைகளை சிறுமியிடம் பேசத் தொடங்கிய அவர், ஒரு கட்டத்தில் அந்த சிறுமியின் உடைகளை கழற்றுமாறு அவரை மிரட்டி உள்ளார்.
இதையும் படியுங்கள் : இந்தியாவின் டாப் 10 கொடூர சீரியல் கில்லர்கள்..!
முதலில் மறுத்த அந்த சிறுமி, இறுதியில் பயத்தால் தனது ஆடைகளை கழட்டி உள்ளார். காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகள் மத்தியில், நிர்வாணமாக அந்த சிறுமியை ராய் புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பிறகு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் அந்த காவல் அதிகாரி. இறுதியில் மனதைரியத்தை வரவழைத்து கொண்ட அந்த சிறுமி, காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்க, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் (POCSO) கீழ் அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் காவல் நிலையத்திலிருந்து தப்பி சென்று தற்போது தலைமுறைவாக உள்ள நிலையில், அவரைப் பற்றிய தகவல்களை கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் அம்மாநில டிஜிபி ஜி.பி சிங் கூறியுள்ளார். மேலும் ஜிபி சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அதில்.. "நான் ஹைதராபாத்தில் காவலராக பணியேற்பதற்கு முன்பு காவல் நிலையம் ஒரு கோவில் போன்றது என்று எங்களுக்கு பலமுறை பாடம் எடுத்துள்ளனர்". ஆனால் இன்று போலீசார் நாங்கள் அனைவரும் தலைகுனியும் வண்ணம் எங்கள் சக அதிகாரி ஒருவர் அந்த கோவிலின் புனிதத்தை நாசம் செய்துள்ளார். அது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து பிமான் ராய் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார் என்றும், மக்களுக்கு சேவை செய்யவே நாம் இருக்கிறோம் ஆகையால் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதையும் படியுங்கள் : செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்வர் ஸ்டாலின் பதவிக்கு ஆபத்து - EPS