மானிய விலையில் மக்களுக்கு வழங்கப்படும் சமையல் கியாஸ் விலையை 7 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

நடப்பு நிதியாண்டுக்குள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதன் தொடர்ச்சியாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில்  14.2 கிலோ எடை கொண்ட  மானிய விலையில் வழங்கப்படும் சமையல் சிலிண்டர் ரூ.479.77 க்கு விற்பனை செய்யப்பட்டது. இனி ரூ.7 அதிகரித்து, ரூ.487.18க்கு விற்பனையாகும்.

 எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் மீது மாதம் தோறும் 2 ரூபாய் உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த விலை உயர்வு நடைமுறையில் இருந்து வந்தது.

இந்நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த ஜூலை 31-ந் தேதி நாடாளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டார். அதில், “ அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மானியங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பதால், சமையல் சிலிண்டர் மீது மாதந்தோறும் ரூ.4 உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்தார்’’. இது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் உயர்த்த வேண்டிய தொகையில் ரூ.2.31 காசுகள் நிலுவையில் இருந்தது. அந்த தொகையையும் சேர்த்து, செப்டம்பர் மாத விலையில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.7 உயர்த்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாதந்தோறும் ரூ. 4 உயர்த்திக் கொள்ள மே மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு பின், 4 முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், மானியம் அல்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.73.50 காசு உயர்த்தப்பட்டுள்ளது, இனி மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.597.50க்கு விற்பனையாகும்.

மண்எண்ணெய் விலையும், லிட்டர் ஒன்றுக்கு 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.மண்எண்ணெய் விலையில் அளிக்கப்படும் மானியத்தையும் ரத்து செய்ய முடிவுெசய்து இருப்பதால், விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மும்பையில் லிட்டர் ரூ.22 விற்பனையான மண்எண்ணெய், ரூ.22.27 காசுகளாக உயர்த்தப்பட்டது.