பெண் வழக்கறிஞர் ஒருவரை, நீதிமன்ற வளாகத்திலேயே மூத்த வழக்கறிஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சாகேத் நீதிமன்றத்தில் 50 வயது வழக்கறிஞர் ஒருவரிடம் இளம் வழக்கறிஞர் ஒருவர் பயிற்சி எடுத்துவந்தார். அவர் பயிற்சிக்கு சேர்ந்தது முதல் பெண் வழக்கறிஞருக்கு காதல் வலை வீசிவந்த சீனியர், அவ்வபோது இரட்டை அர்த்த வசனங்களிலும் பேசி அசத்தியுள்ளார்.

சீனியரின் நடவடிக்கைகளை பெண் வழக்கறிஞர் புரிந்து கொண்டாலும், பயிற்சிக்கு வந்தோம். பயிற்சியை மட்டும் எடுப்போம் என்ற எண்ணத்தில் சீனியரின் இதர விஷயங்கள் குறித்து கண்டுகொள்ளவில்லை.

தனது செயல்களை பெண் வழக்கறிஞர் கண்டுகொள்ளாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சீனியர், அவ்வபோது லேசான நெருடல் போன்றவற்றிலும் ஈடுபட்டார். இப்படியே நாட்கள் சென்ற நிலையில், ஜூலை 14ஆம் தேதி மாலையில் பெண் வழக்கறிஞரை அழைத்த சீனியர், இன்று இரவு முக்கியமான சில வழக்குகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி, நீதிமன்ற வளாகத்தில் உள்ள சேம்பரிலேயே இருக்க வைத்தார்.

இரவு உணவு முடித்த சிறிதுநேரத்தில் பெண் வழக்கறிஞருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு, அவர் படுத்துள்ளார். உடனே அவரை சீனியர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

சம்பவம் நடந்து பல மணி நேரத்துக்குப் பிறகு கண்விழித்த பெண் வழக்கறிஞர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், பெண் வழக்கறிஞரை மருத்துவமனையில் அனுமதித்ததுடன், சீனியர் வழக்கறிஞரையும் கைது செய்தனர்.

இரவு உணவின்போது பயன்படுத்திய ஜூஸில் மயக்க மருந்து கலந்து, பெண் வழக்கறிஞருக்கு கொடுத்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.