Sell golden gold jewelry Echo cancellation of demand for pan card!
ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் தங்க நகை வாங்குபவர்கள் பான் கார்டு, ஆதார் எண்ணை கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற மத்திய அரசின் உத்தரவினால் தீபாவளிப் பண்டிகையின் போது தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உத்தரவு ரத்து
கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின்படி, ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக தங்க நகைகள், விலை உயர்ந்த கற்கள், வைரம் வாங்குவோர் தங்களின் பான்கார்டு, ஆதார் எண்ணை நகைக்கடைக்காரரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விதிமுறை இருந்தது. அந்த உத்தரவால் நகை வியாபாரம் கடுமையாக பாதிக்கிறது என்று மத்திய அரசுக்கு நகைக்கடை உரிமயாளர்கள், வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தததைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அந்த உத்தரவை மத்திய அரசு நீக்கியது.
சூடுபிடிக்கும் விற்பனை
இதனால், அடுத்து வரும் தீபாவளிப்பண்டிகை, தாண்டேரா பண்டிகையின் போது நகை வியாபாரம் சூடுபிடிக்கும் எனத் தெரிகிறது. வரும் 17 ந்தேதி ‘தாண்டேரா’ பண்டிகை வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த பொருட்கள் வாங்க இந்த நாள் சிறந்ததாகக் கருதப்படுவதால், வட மற்றும் மேற்கு இந்தியாவில் மக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை டெல்லியில் ரூ.30 ஆயிரத்து 555 ஆகவும், வெள்ளி கிலோ ரூ.40 ஆயிரத்து 600 ஆகவும் இருக்கிறது. இது வரும் நாட்களில் இந்த விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த பரிசு
இது குறித்து அனைத்து இந்திய கற்கள் மற்றும் நகைகள் கூட்டமைப்பின் தலைவர் நிதின் கண்டேல்வால் கூறுகையில், “ ரூ.50 ஆயிரத்து மேல் நகை வாங்குபவர்கள் பான், ஆதார் எண் தெரிவிக்க வேண்டியதில்லை என்று கூறியது மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. இது தீபாவளிப் பண்டிகைக்கு வாடிக்கை யாளர்களுக்கும், நகைக்கடை உரிமையாளர்களுக்கும் சிறந்த பரிசாக இருக்கும். அடுத்து வரும் நாட்களில் தங்க நகைகள் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வியாபாரமும் இனி சிறப்பாக இருக்கும்’’ என்றார்.
அதிகரிக்கும்
கல்யாண் ஜூவலர்ஸ் நகைக்கடையின் இயக்குநர் ராஜேஷ் கல்யாணராமன் கூறுகையில், “ மத்தியஅரசு தங்க நகைகள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியது சிறந்த விஷயம் அடுத்து வரும் நாட்களில் தங்க நகைகள் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம். கடந்த 2 மாதங்களாக விற்பனை மந்தமாக இருந்தது. அடுத்து வரும் தீபாவளி விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
