ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே சூளூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்.  கடந்த  திங்கள்கிழமை சூளூர்பேட்டையில் பாம்பாட்டி ஒருவர் கொடிய விஷம் கொண்ட பாம்பை சாலையில் வைத்து வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார். அதை ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தனது நண்பர்களுடன் அங்கு சென்ற ஜெகதீஷ்  அதனை வேடிக்கை பார்த்தார். அப்போது, அவருக்குப் பாம்பை தனது கழுத்தில் போட்டு செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து, தனது நண்பர்களிடம் கூறி தான் பாம்பை கழுத்தில் போட்டுக்கொள்கிறேன் தனது செல்போனில், வீடியோ, புகைப்படம் எடுக்குமாறு கூறியுள்ளார்.

பாம்பாட்டியிடம் பணம் கொடுத்து பாம்பை வாங்கி தனது கழுத்தில் போடஜெகதீஷ் முயன்றார். அப்போது பாம்பாட்டியிடம் பாம்பில் பல் பிடுங்கப்பட்டதா, கடித்தால் ஏதேனும் ஆபத்து நேருமா என்று அந்தப் பாம்பாட்டியிடம் பலமுறை கேட்ட பின்பு அந்தப் பாம்பை வாங்கியுள்ளார்.

ஜெகதீஷ் அந்தப் பாம்பை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு நண்பர்களிடம் புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் கூறியுள்ளார். அப்போது, சரியாக பாம்பைப் பிடிக்காததால், குழுத்தில் போடப்பட்ட கொடிய விஷம் கொண்ட பாம்பு, திடீரென்று ஜெகதீஷின் கழுத்தில் கடித்தது.

பாம்பு கடித்தவுடன் பதற்றமடைந்த ஜெகதீஷ், பாம்பைக் கீழே வீசி எறிந்தார். அதன்பின் சிறிது நேரத்தில் ஜெகதீஷ் மயங்கி கீழே விழுந்தார். ஆனால், அந்தப் பாம்பாட்டி, பாம்புடன் சிறிதுநேரத்தில் அங்கிருந்து மாயமானார். ஜெகதீஷை அவரின் நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்தப் பாம்பாட்டி, சூளூர்பேட்டை அருகே மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், பாம்பின் விஷப்பல்லை பிடுங்காமல் வித்தைக் காட்டிகொண்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது. தற்போது பாம்பாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்