இந்தியாவிடம் ரஷ்யா கடன் கேட்டதா? ரஷ்யாவிற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு இந்திய பொருளாதாரம் மேம்பட்டு இங்குள்ள மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? என  பிரதமரின் அறிவிப்பை சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கிழக்கு மண்டல பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 3ஆம் தேதி ரஷ்யா சென்றிருந்தார். கடந்த 5ஆம் தேதி விளாதிவோஸ்டோக் நகரில் நடந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் 'கிழக்கு நோக்கி' கொள்கையின் அடிப்படையில் ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதிகளில் உள்ள நகரங்களின் வளர்ச்சிக்காக 7,200 கோடி கடன் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

பொருளாதாரம் வீழ்ச்சி, பங்குச் சந்தை சரிவு, வாகன உற்பத்தி விற்பனை குறைவு , தங்கம் விலை உயர்வு என இந்தியா பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இந்த சமயத்தில் ரஷ்யாவிற்கு கடன் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பும்தான் பொருட்கள் வாங்கும் திறனற்றவர்களாக மக்களாக மாற்றியுள்ளது. அதுதான் ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகள் வீழ்ச்சியடைந்ததற்கு காரணம். இதிலிருந்து எப்படி மீள்வது என்று விழித்துக்கொண்டிருக்கும் வேளையில் ரிசர்வ் வங்கியிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை எடுப்பது பேராபத்துக்குரியது. இதைவிட இக்கட்டான நிலையில் கூட மத்திய அரசுகள் அதனை செய்யவில்லை என்று விமர்சித்தார்.

இதனையடுத்து, தற்போது நாம் 57 லட்சம் கோடிக்கு மேல் கடனை வைத்துள்ளோம். மிகப்பெரிய பொருளாதார இக்கட்டில் இருக்கிறோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா சென்று 5000 கோடி முதலீடுகளை கொண்டுவர முயற்சித்துள்ளார். ஆனால், இந்திய பிரதமர் மோடி ரஷ்யா சென்று அந்நாட்டின் கிழக்கு பகுதி வளர்ச்சிக்காக 7000 கோடி கடன் கொடுப்பதாக  என்று அறிவித்திருக்கிறார். இந்தியாவிடம் ரஷ்யா கடன் கேட்டதா? ரஷ்யாவிற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு இந்திய பொருளாதாரம் மேம்பட்டு இங்குள்ள மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.