முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் 11ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் அவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளித்துவருவதாகவும் தெரிவித்தது. இந்த தகவல் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக தெரிவித்தது. அதனால் பதற்றம் அதிமாகியுள்ளது. இதையடுத்து தேசிய அளவில் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, வாஜ்பாயின் வீடு ஆகியவற்றிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக வாஜ்பாயின் வீட்டில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.