மத்திய அரசு தடை செய்த ரூ.500, ரூ1000 நோட்டுகள் கடத்தப்படுவதை கண்காணிக்க, அனைத்து விமானநிலையங்களும் பாதுகாப்பை பலப்படுத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், பீகார் தொழிலதிபர் ஏ.கே.சிங் என்பவர், ஹரியானா மாநிலம், ஹிசார் நகரில் இருந்து தனி நபராக ஜெட் விமானத்தை இயக்கி, நாகாலந்து மாநிலம், திமாப்பூரில்தரையிறங்கினார். அவரிடம் துணை ராணுவப்படையினர் மேற்கொண்ட விசாரணையில், விமானத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.5.5. கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவர் அந்த பணத்துக்கு வரி செலுத்தியதற்கான ஆவணத்தை காண்பித்ததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதுபோல் சம்பவங்கள் அடுத்து நிகழாமல் இருக்க, அனைத்து விமானநிலையங்களையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ விமானநிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 98 விமானநிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ரிசர்வ் போலீஸ் படையினர் ஆகியோருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு,கருப்பு பணத்தை தீவிரமாக கண்காணிக்க ஆணையிடப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.