ஆம் ஆத்மியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளது: காங்கிரஸ்!

ஆம் ஆத்மியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

Seat sharing talks with Aam aadmi party positive says Congress smp

பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் சமீபத்திய கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. அதில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மாநில கட்சிகள். மேலும், காங்கிரஸின் செல்வாக்கு பல்வேறு மாநிலங்களில் குறைந்துள்ளதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஆம் ஆத்மியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இரு கட்சிகளுக்கு இடையேயும் உரசல் போக்கு நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த தகவல் கூட்டணிக்குள் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், இரு கட்சிகளிடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக தெரிகிறது. முதல் சுற்று பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் பயனுள்ளது எனவும், நேர்மறையானது எனவும் கூறியதுடன், தொகுதி பங்கீடை இறுதி செய்ய மீண்டும் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தியா கூட்டணியில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், தொகுதி பங்கீடு குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு செய்யப்படும் என இதுகுறித்த தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் கட்சியின் தேசிய கூட்டணிக் குழு (என்ஏசி) உறுப்பினர்கள் முகுல் வாஸ்னிக் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி தரப்பில் டெல்லி அமைச்சர்கள் அதிஷி மர்லினா மற்றும் சவுரப் பரத்வாஜ் மற்றும் ராஜ்யசபா எம்பி சந்தீப் பதக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மக்களவை தேர்தல் 2024: ஜன., 14 முதல் நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முகுல் வாஸ்னிக், தொகுதி பங்கீடு, மக்களவை தேர்தலின் பிற அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அவை விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த ஆம் ஆத்மி தலைவர்கள் எங்களுடன் கலந்துரையாட அனுப்பப்பட்டனர். இந்த சந்திப்பு நன்றாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பரத்வாஜ் கூறுகையில், “இந்திய கூட்டணிக்கான இடங்கள் விரைவில் இறுதி செய்யப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios