மக்களவை தேர்தல் 2024: ஜன., 14 முதல் நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

PM Modi likely to embark on a nation wide tour begin on Jan 14 ahead of loksabha elections 2024 smp

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கடந்த இரண்டு முறை  வெற்றி பெற்ற பாஜக, மூன்றாவது முறையாக ஹாட்-ரிக் வெற்றி பெற்ற முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஓரணியில் திரண்டுள்ளன.

வழக்கமாக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே ஏற்படும் அதிருப்தி, கூட்டணியில் இருந்த சில கட்சிகள் பிரிந்து சென்றது, இந்தியா கூட்டணி ஆகியவை பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், பாஜகவின் கை ஓங்கியே இருப்பதாக தெரிகிறது. மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்புகளும் அதையே கணித்துள்ளன. பொரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக வெற்று பெறும் என கணித்துள்ளன.

பாஜகவை பொறுத்தவரை, பிரதமர் மோடிதான் அக்கட்சியின் முக்கிய பிம்பம். கடந்த இரு தேர்தல்களிலும் நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மோடி அலை வீசியதே பாஜகவின் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த முறையும் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் வருக்கிற 14ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி இறுதி வரை நடக்கும் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுற்றுப்பயணத்தின்போது, கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாஜக அரசாங்கத்தின் சாதனைகளைப் பற்றி மக்களுக்கு பிரதமர் மோடி எடுத்துரைப்பார். அவரது சுற்றுப்பயண திட்டத்தின் நோக்கமும் இதுவேயாகும். சுற்றுப்பயணத்தின் போது பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.

அரசாங்கத்தின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்த உத்தி வடிவமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி பாஜக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

பிப்ரவரி இறுதிக்குள் பிரதமர் மோடி பெரும்பாலான மாநிலங்களுக்குச் செல்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் 2-3 முறை பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிறிய மாநிலங்களுக்கு ஒரு முறையாவது அவர் செல்லும் வகையில் பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் 2024: மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!

இதனிடையே, பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் பகுதிக்கு பிரதமர் மோடி ஜனவாரி 13ஆம் தேதி செல்லவுள்ளார். மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் கணிசமான எண்ணிக்கையிலான தொகுதிகளை வெல்வதில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும் ஜனவரி 12ஆம் தேதியன்று பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் செல்லவுள்ளார்.

மேலும், ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. ராமர் கோவில் திறப்பு, மக்களவை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படும் நிலையில், கோயில் திறப்பையடுத்து  பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின் போது, அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கையை வைத்து வாக்களர்களின் மனநிலையை கணிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

தெலங்கானா, மேற்கு வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா மற்றும் மத்திய அரசை அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பிற மாநிலங்களும் பிரதமர் மோடி செல்லவுள்ளார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரதமரின் இந்த பயணங்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக இருக்கும் எனவும், 150க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக பிரதமர் மோடியின் பயணம் இருக்கும் எனவும் தெரிகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios