மக்களவை தேர்தல் 2024: மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!
மக்களவை தேர்தலுக்கான மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று ஈடுபடவுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் உள்ளன.
இந்தியா கூட்டணியின் சமீபத்திய கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. அதில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
அந்தவகையில், மக்களவை தேர்தலுக்கான மகாராஷ்டிர மாநில தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று ஈடுபடவுள்ளன. இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், “மகாராஷ்டிராவின் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க இன்று முக்கியக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்லது. காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை தொகுதிப் பங்கீட்டில் எந்த சச்சரவும் இல்லை. 2-3 தொகுதிகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அது குறித்து விவாதிப்போம்.” என்றார்.
முன்னதாக, ஆம் ஆத்மியுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.