ஹிஜாப் சர்ச்சை... மூடப்பட்ட பள்ளிகள் நாளை திறப்பு... அறிவித்தார் பசவராஜ் பொம்மை!!
ஹிஜாப் விவகாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் பரவியது. ஒரு சில இடங்களில் மோதல்களும் அரங்கேறியது. ஹிஜாப் விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் தீவிரமடைந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகளை மீண்டும் திறக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கர்நாடகத்தில் 14 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்கப்படும் என முதலமைச்சர் பசவராஜ் இன்று அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட காவல் துணை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோரிடம் அமைதி குழு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறந்த பிறகு மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.