தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து தலையில் ‘ஹெல்மெட்’அணிந்து  நூதனப் போராட்டம் நடத்தினர்.

தெலங்கானா மாநிலம் மேடக் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் கட்டிடங்கள் மிகவும் பழமை அடைந்துவிட்டதால், மேற்கூரைகள் முழுவதும் உதிர்ந்து விழத்தொடங்கியுள்ளன. இதனால், பாடம் நடத்தமுடியாமல் ஆசிரியர்களும், வகுப்பு அறையில் மாணவர்களும் பாடம் கற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் இவர்களின் தலையில் சிமென்ட் பூச்சு விழுவதால் காயம் ஏற்படுகிறது.

இதைச் சரி செய்யக்கோரி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம், பள்ளியின் சார்பிலும், ஆசிரியர்கள் தரப்பிலும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இது குறித்து அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.

மேலும், நாளுக்குநாள், பாடம் நடத்தமுடியாத தகுதியற்ற கட்டிடங்கலாக வகுப்பறைகள் மாறி வருகின்றன. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, ஆசிரியர்கள் அனைவரும் நேற்று முன் தினம்தலையில் ‘ஹெல்மெட்’ அணிந்து போராட்டம் நடத்தினர்.

இது குறித்து ஆசிரியர் தரப்பில் கூறுகையில், “ இப்போது மழைகாலம் தொடங்கி கடுமையாக மழைபெய்து வருகிறது. இதனால், வகுப்பு அறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த இயலவில்லை. வகுப்பறைகளை சரி செய்து கொடுங்கள் எனக் கூறியும் மாவட்டநிர்வாகம் காதில் வாங்காமல் இருக்கிறது.

இதில் ஸ்மார்ட் வகுப்பு அறைகளை எப்படி அமைப்பது. ஆதலால், எங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கவேஹெல்மெட் அணிந்து பணியாற்றினோம்’’ எனத் தெரிவித்தனர்.

சமீபத்தில் இதேபோல, பீகாரில் ஒரு அலுவலகத்தின் மேற்கூறை அடிக்கடி பெயர்ந்து விழுவதால், அதை சரி செய்யக்கோரி, அலுவலர்கள் அனைவரும்ஹெல்மெட் அணிந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.