மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கூறி பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது: கிராம மக்கள் போராட்டம்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கூறி பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
சத்தீஸ்கர் மாநிலம் மோஹ்லா-மாப்னூர்-அம்பாகர் சௌகி மாவட்டத்தில் 25 வயதுடைய பள்ளி ஆசிரியர் ஒருவரை மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கூறி போலீசார் கைது செய்துள்ளனர். அவரது கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் உட்பட கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதன்வாடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரேகட்டா கிராமத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட அந்த ஆசிரியரின் பெயர் ராம்லால் நுரேட்டி என்பதும், அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராம்லால் நுரேட்டி கடந்த ஆண்டு செப்டம்பரில் அப்பகுதியில் மாவோயிஸ்ட் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டுவதில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலம் மஹ்கா கிராமத்தைச் சேர்ந்த ராம்லால் நுரேட்டி கரேகட்டா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
மதன்வாடா பகுதியில் மவோயிஸ்ட் இயக்கத்தின் 19ஆவது ஆண்டு விழாவைக் கடைப்பிடிக்க மாவோயிஸ்டுகள் வேண்டுகோள் விடுத்த நிலையில், அவர்களுக்கு ஆதரவான சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி போலீசார் மீட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். விசாரணையில் ராம்லால் நுரேட்டி இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
“விசாரணைகள் மற்றும் தொழில்நுட்ப சான்றுகள் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தில் ஈடுபட்டதை உறுதிசெய்தது. அதைத் தொடர்ந்து அவர் சிட்டகான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்” என அவர் கூறினார். கைது செய்யப்பட்ட ராம்லால் நுரேட்டி, ராஜ்நந்த்கான் மாவட்ட சிறைக்கு அடைக்கப்பட்டுள்ளாதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
1987இல் காங்கிரஸுக்கு எதிராக பிரதமர் மோடி நடத்திய நியாய யாத்திரை!
“விசாரணையின் போது, முதலில் மழுப்பலான பதில்களை தெரிவித்த ராம்லால் நுரேட்டி, மாவோயிஸ்ட் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை வைத்ததை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் சத்தீஸ்கர் சிறப்பு பொது பாதுகாப்பு சட்டம் 2005 இன் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், நீதிமன்ற உத்தரவின்பேரில் ராஜ்நந்த்கான் மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.” என தனது விவரங்களை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அவரை விடுவிக்கக் கோரி, கிராம மக்கள் சிட்டகான் காவல் நிலையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். “"நூரேட்டி விடுவிக்கப்படும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடருவோம். அவர் எந்த விசாரணையும் இன்றி பள்ளியில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு பள்ளி ஆசிரியர், நக்சலைட் அல்ல.” என போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த போராட்டத்தில் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.