அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட ஆம் ஆத்மி வலுவாக இருக்கும் மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் தொடங்காத நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
மக்களவைத் தேர்தல் 2024க்கு இடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த முறை வந்தபோது, தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடையுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியின் கோரிக்க்கையை நிராகரித்தது.
“கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்குப்பதிவு செய்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், தேர்தலுக்கு வெகு சமீபத்தில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே அல்லது பின்னரோ அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம்.” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையின்போது, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியபோது, அவருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளைப் போலவே, கெஜ்ரிவாலுக்கும் ஜாமீன் நிபந்தனைகள் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அதேபோல், கெஜ்ரிவால் முதல்வராக எந்த அதிகாரபூர்வ பணிகளையும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜாமீன் வழங்குகிறோம் ஆனால் முதல்வராக தொடர்வதில் உடன்பாடு இல்லை என்பதை கெஜ்ரிவால் தரப்பிடம் உச்ச நீதிமன்றம் பல்வேறு வார்த்தைகளில் கூறியது என்பது நினைவுகூரத்தக்கது.
கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஷதன் ஃபராசத், “அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு எந்த தடையும் இல்லை. எனவே, அனைத்து நடைமுறைகளையும் உடனடியாக முடித்து இன்றே அவரை விடுதலை செய்ய முயற்சிப்போம்” என தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மக்களவைத் தேர்தலில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும்?
திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்ட பிறகு ஆம் ஆத்மி கட்சியினர் மேலும் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள். மக்களவைத் தேர்தலுக்காக கட்சி உறுப்பினர்கள் முழு பலத்துடன் பணியாற்றுவார்கள். சிறையில் இருந்து வெளியே வந்ததும் தேர்தல் பிரசாரத்தை அவர் நேரடியாக வழிநடத்துவார். டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட ஆம் ஆத்மி வலுவாக இருக்கும் மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் தொடங்காத நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரசாரம் வாக்காளர்களின் மனநிலையை மாற்றும். இது மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அட்டவணையின்படி, டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25ஆம் தேதி ஆறாவது கட்டத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதேபோல், பஞ்சாபில் மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஜாமீன் வெளியே வந்ததும், மக்களவைத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் புதிய வியூகத்தை உருவாக்கவும் வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் முரன்பட்டாலும், இந்தியா கூட்டணியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி முக்கிய கட்சியாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது, பாஜகவின் பழிவாங்கல் நடவடிக்கையால் கைது செய்யப்பட்டதாக வலுவான பிரசாரங்களை அவர் முன்வைக்கவும் வாய்ப்புள்ளது. இது அடுத்தடுத்து நடக்கவிருக்கும் தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
ஆனால், கெஜ்ரிவாலின் விடுவிப்பு தங்களுக்கு தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என பாஜகவினர் கூறி வருகின்றனர். “பெரிய பெரிய கிரிமினல்களுக்கு எப்படி ஜாமீன் வழங்குகிறதோ அதே போல் டெல்லி முதல்வருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது, அவர் ஊழல் செய்தவர் என்பதை நீதிமன்றம் கூட ஏற்றுக்கொண்டது, அதனால்தான் அவருக்கு 21 நாட்கள் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த 21 நாட்கள் எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தபோவதில்லை.” என பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக மட்டுமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருந்து தெளிவாகிறது. ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகு அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.