Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்.. பாஜகவிற்கு சம்மட்டி அடி- இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளும் வகையில் ஜூன் 1ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் கைது செய்தது. தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என்ற காரணத்திற்காக பாஜகவின் தூண்டுதலால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதாக இந்தியா கூட்டணி கட்சியினர் விமர்சித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தற்போதைய சூழலில் மிகவும் பயனுள்ளது
இந்த தீர்ப்பு இந்தியா கூட்டணி கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். இடைக்கால ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளவர், தற்போதைய தேர்தல் சூழலில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பாஜகவிற்கு சம்மட்டி அடி
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு பாஜக ஆட்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி என தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை முடிவதற்கு முன்பே ஒரு மாநில முதலமைச்சரை கைது செய்வது நாட்டிற்கு அவமானம் என தெரிவித்துள்ளார். இதே போல பல அரசியல் கட்சி தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். .