ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சன் இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்க தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதே போல்  ஆந்திர அரசு சார்பில் 40 வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.


இந்நிலையில் தாக்குதலில் பலியான 40 வீரர்களில் 23 வீரர்கள் எஸ்.பி.ஐ. வங்கியில் கடன் பெற்றிருந்தனர். அவர்கள் பெற்றிருந்த கடன் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்வதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பிஐ  வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎப் வீரர்களில் 23 பேர் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள். அவர்கள் எங்கள் வங்கியில் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்கிறோம். 


அதுமட்டுமல்லாமல் அவர்கள் வாடிக்கையாளர்கள் என்பதால், அவர்களுக்கு காப்பீடுத் தொகையாக வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க இருக்கிறோம்.

நாட்டின் பாதுகாப்புக்காகச் சென்று உயிர்நீத்த வீரர்கள் நிலை வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினரை காக்க வேண்டியது அனைவரின் கடமை. வீரர்களை இழந்து தவித்து வரும் குடும்பத்தினருக்கு எங்கள் வங்கியின் மூலம் சிறிய உதவியாக இதை செய்கிறோம் என தெரிவித்து நெகழ்ச்சி அடையச் செய்தார்.