ரகசியதகவல்கள் திருடப்பட்டதைத் தொடர்ந்து, முடக்கப்பட்ட 6 லட்சம் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு விரைவில் கிடைக்கும் என ஸ்டேட்வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய வங்கி வரலாற்றில், மிக விரைவில் இத்தனை வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு வழங்கப்படுவது இதுதான் முதல்முறையாக இருக்கும் எனத் தெரிகிறது.
தகவல் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதையடுத்து கடந்தவாரத்தில் பாரத ஸ்டேட் வங்கி, 6.26 லட்சம் டெபிட் கார்டுகளை முடக்கியதாக அறிவித்தது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எச்.டி.எப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி போன்றவற்றின் டெபிட் கார்டுகள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்திட்ட 26 இலட்சம் டெபிட் கார்டுகள் விசா, மாஸ்டர்கார்டு வகையை சார்ந்தவை. மற்றவை ரூபே கார்டுகள் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
நாடு முழுவதும் உள்ள பல பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையங்களின் பரிவர்த்தனைகளில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதால் நேற்று ஒரே தினத்தில் 6.26 லட்சம் ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டதை வாடிக்கையாளர்களுக்கும் எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கார்டுகள் முடக்கப்பட்டவர்களுக்கு விரைவில் புதிதாக ஏடிஎம் டெபிட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் வங்கிகள் அறிவித்தன.
இது குறித்து எஸ்.பி.ஐ. வங்கியின் கார்ப்ரேட் செயலாளர் துணை இயக்குநர் மஞ்சு அகர்வால் கூறுகையில், “ தகவல் திருட்டு காரணமாக முடக்கப்பட்டகார்டுகளுக்கு பதிலாக புதிய கார்டுகள் வழங்கும் பணி தொடங்கிவிட்டது. ஏறக்குறைய 90 சதவீத பணிகள் முடிந்து அந்தந்த குறிப்பிட்ட வங்கிகளுக்கு டெபிட்கார்டுகள் அனுப்பப்பட்டுவிட்டன. இன்னும் சில ஆயிரம் வாடிக்கையாளர்கள் தங்கள் முகவரியை அப்பேட் செய்யாத காரணத்தில் டெபிட் கார்டுகளை வழங்க முடியவில்லை. அவர்களுக்கும் விரைவில் தகவல் தெரிவிக்கப்படும். அடுத்த சில நாட்களில் ஏறக்குறைய 7 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு புதிய டெபிட்கார்டுகள் வழங்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
