கல்விக் கடனில் வட்டி மானியத்துக்காக மத்திய மனித வளத்துறை கடந்த 7 ஆண்டுகளாக அளித்த தொகையில், ரூ.534 கோடியை ஏழை மாணவர்களுக்கு அளிக்காமல் பாரத ஸ்டேட் வங்கி மோசடி செய்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

குடும்ப வருமானம்

மத்திய அரசின் வட்டி மானியத் திட்டத்தின்(சி.எஸ்.ஐ.எஸ்.) கீழ், மாணவரின் குடும்ப வருவாய் ஆண்டுக்கு ரூ.4.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், அவர் தனது படிப்பு முடிக்கும் வரை கல்விக்கடன் வட்டியில் இருந்து மானியம் அளிக்கப்பட வேண்டும்.

ஆர்.டி.ஐ. மனு

இந்நிலையில், ஆங்கில நாளேடு ஒன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ.) கடந்த 7 ஆண்டுகளாக மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கல்விக்கடன் வட்டி மானியம் குறித்து கேட்டு இருநத்து.

ரூ.1,799 கோடி

அதில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை மத்திய அரசு வட்டி மானியத்துக்காக ரூ.2 ஆயிரத்து 333.60 கோடி அளித்துள்ளது. அதில், ஆயிரத்து 799.31 கோடி பணம் மட்டுமே மாணவர்களின் கணக்கில் கல்விக்கடன் வட்டி மானியமாக செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தை செலுத்தாமல் ஸ்டேட் வங்கி வைத்துக்கொண்டு, மாணவர்களை வலுக்கட்டாயமாக வட்டி கட்ட வைத்துள்ளது.

திருப்பி அளிக்காத தொகை

ஒவ்வொரு ஆண்டு அரசு வழங்கிய தொகையில், குறிப்பிட்ட தொகையை மாணவர்களுக்கு அளிக்காமல் ஸ்டேட் வங்கி வைத்துக்கொண்டுள்ளது. அதன்விவரம்-

இதில் 2009-10ம் ஆண்டு ஸ்டேட் வங்கி ரூ.86.92 கோடி செலுத்தி உள்ளது, ரூ.7.95 கோடி செலுத்தவில்லை. 2010-11ம் ஆண்டு ரூ.20.06 கோடி மாணவர்களின் கணக்கில் செலுத்த வில்லை. 2011-12ம் ஆண்டு ரூ.54.54 கோடி வட்டிமானியம் அளிக்கப்படவில்லை. 2012-13ம் ஆண்டு ரூ.51.74 கோடியும், 2013-14ம் ஆண்டு ரூ.101.94 கோடியும் மாணவர்களுக்கு மானியமாக அளிக்காமல் வங்கியே வைத்துக்கொண்டது. 2014ம் ஆண்டில் ரூ.17.12 கோடியும், 2015-16ம் ஆண்டில் ரூ.280.94 கோடியும் மானியமாக ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்படவில்லை. 

இதற்கிடையே கனரா வங்கி தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்டத் தகவலில், “ பாரத ஸ்டேட் வங்கி கடந்த 7 ஆண்டுகளில் மாணவர்களின் கல்விக்கடன் வட்டி மானியத்துக்காக அரசிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 330 கோடி கேட்டு இருக்கிறது’’ எனத் தெரிவிக்கிறது.

அதிகமான புகார்கள்

இது குறித்து முன்னாள் வங்கி அதிகாரியும், கல்விக்கடன் பெற்றுக்கொடுக்கம் அமைப்பு நடத்தும் (இ.எல்.டி.எப்.) கே. சீனிவாசன் என்பவர் கூறியதாவது-

 பாரத ஸ்டேட் வங்கியின் செயல் நேரடியாக நாட்டில் உள்ள ஏழை மாணவர்களை பாதித்துள்ளது. அவர்களை வலுக்கட்டாயமாக 40 சதவீதம் கூடுதல் பணத்தை கடனுக்கும் அதிகமாக செலுத்த வைத்துள்ளது ஸ்டேட் வங்கி. வட்ட மானியம் இல்லை என்பது தொடர்பாக ஏராளமான புகார்கள் எங்களுக்கு மாணவர்களிடம் இருந்து வந்துள்ளது. குறிப்பாக ஸ்டேட் வங்கிமீது அதிகமாக இருக்கிறது.

அரசிடம் ஒப்படைக்க வேண்டும்

ஆனால், வங்கிகளோ மாணவர்கள் முறையாக கடனை செலுத்துவதில்லை என்று வங்கிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மாணவர்களுக்காக அளிக்கப்பட்ட பணம் மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படாமல் இருந்தால் அது அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமே தவிர, வங்கிகளே வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், கல்விக்கடன் வட்டி மானியம் பெறத் தகுதியாக இருந்தபோதிலும், தங்களை வலுக்கட்டாயமாக கடனை திருப்பிச் செலுத்தக் கூறி ஸ்ேடட் வங்கி வற்புறுத்தியது என்று ஏராளமான மாணவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.