பிராந்திய மற்றும் உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா, சவுதி கூட்டாண்மை முக்கியம்: பிரதமர் மோடி!!
உங்கள் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வை 2030இன் கீழ், சவுதி அரேபியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது என சவுதி அரேபியா பட்டத்து இளவரசரை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியுள்ளார்
சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இன்றைய தினம் பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் அவரை வரவேற்றனர். தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்தியா - சவுதி அரேபியா வியூகக் கூட்டாண்மை கவுன்சிலின் முதல் கூட்டத்திற்கு இரு தலைவர்களும் தலைமை தாங்கினர். கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடியின் ரியாத் பயணத்தின் போது இந்த கவுன்சில் உருவாக்கப்பட்டது. அரசியல்-பாதுகாப்பு-சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான குழு மற்றும் பொருளாதாரம், முதலீட்டுக்கான குழு என இரண்டு குழுக்களை இக்கவுன்சில் உள்ளடக்கியது. 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற இரு குழுக்களின் அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெற்றன.
அப்போது, மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் அரசியல், பாதுகாப்பு, சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக் குழு மற்றும் பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக் குழு ஆகிய இரண்டு குழுக்களின் முன்னேற்றத்தை தலைவர்கள் மதிப்பீடு செய்தனர்.
அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களும் இந்த பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது. மேலும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார வழித்தடத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த வழித்தடமானது இரு நாடுகளை இணைப்பது மட்டுமின்றி, ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் இணைப்பை வழங்கவும் உதவும். உங்கள் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வை 2030இன் கீழ், சவுதி அரேபியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது.” என்றார்.
கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்து உதயநிதி மீண்டும் கலாய்!
முன்னதாக, ஜி20 உச்சி மாநாட்டின்போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான, கப்பல் மற்றும் ரயில் இணைப்பு வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற வரலாற்று ஒப்பந்தம் பற்றி இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை அறிவித்தன.
அதேபோல், சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பேசுகையில், “இந்தியா-சவுதி அரேபியா உறவின் வரலாற்றில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதேசமயம், நமது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கவும் வாய்ப்புகளை உருவாக்கவும் ஒத்துழைப்பு உள்ளது. இன்று நாம் எதிர்கால வாய்ப்புகளில் பணியாற்றி வருகிறோம். ஜி 20 உச்சிமாநாட்டின் நிர்வாகத்திற்கும், மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார வழித்தடம் உட்பட அதை உருவாக்குவதற்கு விடாமுயற்சியுடன் செயல்படுவது உள்ளிட்ட நமது முயற்சிகளுக்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்.” என்றார்.