பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு, உமாபாரதி பொறுப்பேற்றார் என்று ஊடகத்தில் வெளியான தகவலுக்கு, உமாபாரதி ஒருபோதும் அச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றதில்லை என்பதை ஆதாரத்துடன் நிறுவியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் சத்யபால் ஜெயின்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்க தூண்டியதாக, பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாராதி உட்பட 32 பேர் மீது குற்றச்சதி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்று கூறி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

ஆனால் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு உமாபாரதி ஏற்கனவே பொறுப்பேற்றிருப்பதாக என்று ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், அந்த செய்தி முற்றிலும் தவறானது என்பதை பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த லிபரான் ஆணையத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி ஆதாரத்துடன் நிறுவியுள்ளார், பாஜக தேசிய செயலாளரும் சொலிசிட்டர் ஜெனரலுமான சத்யபால் ஜெயின்.

இதுகுறித்து சத்யபால் ஜெயின் பதிவிட்டுள்ள டுவீட்டில், நீதிபதி லிபரான் அறிக்கையில், “உமாபாரதி ஒருபோதும் பாபர் மசூதி இடிப்புக்கு பொறுப்பேற்றதில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அச்சு ஊடகம் ஒன்றில் வெளிவந்த செய்தி முற்றிலும் பொய்யானது.

 

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி ஆகியோரை லிபரான் ஆணையத்தின் பிரதிநிதித்துவப்படுத்தும் நபராக, அந்த ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களையும் 14 ஆண்டுகளாக உன்னிப்பாக கவனித்துவருகிறேன்.

உமாபாரதி  ஒருபோதும் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்றதில்லை. பாபர் மசூதியை இடிக்க முயலும் கூட்டத்தை தடுப்பதற்காக தன்னை அத்வானி அனுப்பிவைத்ததாகவும், ஆனால் கர்-சேவாக்கை சேர்ந்தவர்கள் தன்னை அங்கிருந்து கிளம்புமாறு அனுப்பிவிட்டதாகவும் தான், உமாபாரதி, லிபரான் ஆணையத்திடம் தெரிவித்தார். இதை நீதிபதி லிபரானே, அவரது தலைமையிலான ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் 124.15 பத்தியில் 10வது அத்தியாயத்தில் தெரிவித்திருக்கிறார் என்று சத்யபால் ஜெயின் தெரிவித்துள்ளார்.