ஜுலை முதல் வாரத்தில்  டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணையவுள்ளதாக கேரள ஆட்டம்பாம் சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் சோலார் பேனல் ஊழல்  வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டவர் சரிதா நாயர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த ஊழல் வழக்கில் அப்போது முதலமைச்சராக இருந்த உம்மன் சாண்டிக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறி அதிரவைத்தார்.

சிறையில் அடைக்கப்பட்ட சரிதா நாயர், பின்னர் ஜாமீனில் வெளிவந்து, தற்போது கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியில் பேப்பர் கப் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அண்மையில் இவர் நாகர்கோவிலில் முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளருமான  பச்சைமாலை சந்தித்து தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைய விரும்புவதாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரிதா நாயர், பொது மக்களிடம் ஜெயலலிதாவைப் போல டி.டி.வி.தினகரனும் நன்கு நெருக்கமாக இருக்கிறார், பொது மக்களின் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் எனவே அவரது தலைமையின் கீழ் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணையவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வரும் ஜுலை  மாதம் முதல் வாரத்தில் சென்னை வந்து டி.டி.வி. தினகரனை நேரில் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணையவுள்ளதாக செய்திப் பத்திரிக்கை ஒன்றுக்கு  சரிதா நாயர் பேட்டி அளித்துள்ளார்.

டி.டி.வி.தினகரனுக்கு பொன்னாடை போர்த்தி சரிதா நாயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார் என்ற புகைப்படமும்,  செய்தியும் நமது எம்ஜி,ஆர் நாளிதழில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.