மகா கூட்டணி’யை உடைத்தது, 11 கோடி பீகார் மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டதாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் வேதனை தெரிவித்தார்.

கடந்த பீகார் சட்டசபை தேர்தலின்போது, பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து நிதிஷ்குமார் தலைமையில் ‘மகா கூட்டணி’ அமைக்கப்பட்டது.

இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.. சமீபத்தில் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்-அமைச்சருமான நிதிஷ்குமார் பா.ஜதாவுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தார்.

ஆனால், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான சரத் யாதவுக்கு இந்த முடிவில் உடன்பாடு இல்லை. இந்த நிலையில், மக்களை சந்தித்துப் பேசுவதற்காக பீகார் மாநிலத்தில் 3 நாள் சுற்றுப்பயணத்தை சரத் யாதவ் நேற்று தொடங்கினார்.

பாட்னா விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘5 ஆண்டு கால ஒப்பந்தத்தில் அமைக்கப்பட்ட மகா கூட்டணியை உடைத்தது பீகாரின் 11 கோடி மக்கள் நம்பிக்கையை தகர்த்துவிட்டதாகவும், இது தனக்கு வேதனை அளிப்பதாகவும் கூறினார்.

முன்னதாக நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து வெளியேறியபோது, ‘‘இது பீகார் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்’’ என, சரத் யாதவ் கூறி இருந்தார். இந்த நிலையில் விமான நிலையத்தில் சரத் யாதவ் நேற்று கூறிய கருத்தின் மூலம் அவர் நிதிஷ்குமாரிடம் இருந்து விலகிச் செல்வது உறுதியாகி விட்டது.

சரத் யாதவை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்கள் மிகக் குறைவாகவே வந்திருந்தனர். அதே நேரத்தில் ராஷ்டிரீய ஜனதா தளம் தொண்டர்கள் அதிக அளவில் அங்கு கூடி இருந்தனர். கட்சியின் மூத்த தலைவரும், பீகார் முன்னாள் அமைச்சருமான ராமை ராமும் யாதவை வரவேற்றார்.

சரத் யாதவ் பேட்டியின்போது மேலும் கூறுகையில், ‘‘கடந்த தேர்தலின்போது மகா கூட்டணியும், பா.ஜனதாவும் தனித்தனியான மாறுபட்ட தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக இரு எதிர் அணியினரின் தேர்தல் அறிக்கைகள் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன. நான் மகா கூட்டணயில் தொடர்ந்து நீடிப்பேன்’’ என்றார்.

சரத் யாதவ் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்து வருகிறார். ‘‘உங்கள் பீகார் சுற்றுப்பயணம் கட்சி விரோத செயல் ஆகாதா?’’ என்ற கேள்விக்கு பதில் அளிக்க யாதவ்மறுத்துவிட்டார்.