கெஜ்ரிவாலை போல் சஞ்சய் சிங்கும் குற்றாவாளிதான்: பாஜக சாடல்!
ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் இன்னும் விடுவிக்கப்படவில்லை; கெஜ்ரிவாலை போல அவரும் குற்றாவாளிதான் என பாஜக கடுமையாக சாடியுள்ளது
டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. டெல்லி ஆம் ஆத்மி அரசின் இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த புதிய கலால் கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர்.
இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி கீழமை, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை இரு தினங்களுக்கு முன்னர் விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மதரஸா கல்வி வாரியச் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் தடை!
இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இன்னும் விடுவிக்கப்படவில்லை; கெஜ்ரிவாலை போல அவரும் குற்றாவாளிதான் என பாஜக கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் கௌரவ் பாட்டியா கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் சிங்கை நீதிமன்றம் இன்னும் விடுவிக்கவில்லை. அவருக்கு ஜாமீன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவைப் போலவே அவர் இன்னும் குற்றவாளியாகவே உள்ளார்.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராஜ்யசபா உறுப்பினராக சஞ்சய் சிங்கின் பதவிக்காலம் ஜனவரி 27ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினராக அவரை மீண்டும் ஆம் ஆத்மி கட்சி தேர்வு செய்து என்பதும், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.